சென்னை: கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. மொத்த விலையில் கிலோ ரூ.80-க்கும், சில்லறை விற்பனையில் ரூ.250 வரையும் விற்கப்பட்டு வருகிறது.
சாம்பாரில் வாசனையை கூட்டுவதில் முருங்கைக்காய்க்கு நிகர் வேறு இல்லை. அத்துடன், வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் நிறைந்ததாக முருங்கைக்காய் உள்ளது. அதனால் காய்கறி வாங்கச் செல்லும் இல்லத்தரசிகளின் முதல் தேர்வாக முருங்கைகக்காய் உள்ளது.
கிலோ ரூ.10 வரை வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக முருங்கைக்காய் விலை உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் முதல் மொத்த விலையில் கிலோ ரூ.80 ஆகவும், சில்லறை விற்பனையில் ரூ.250 வரையும் விற்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தைகளில் கிலோ ரூ.300 வரை உயர்ந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான கேரட் ரூ.50, நூக்கல் ரூ.45, பெரிய வெங்காயம் ரூ.40, அவரைக்காய் ரூ.35, பீன்ஸ், சாம்பார் வெங்காயம் தலா ரூ.30, தக்காளி ரூ.28, உருளைக்கிழங்கு, முள்ளங்கி தலா ரூ.25, வெண்டைக்காய் ரூ.20, பாகற்காய் ரூ.15, முட்டைகோஸ் ரூ.13, புடல்கா்ய் கத்தரிக்காய் தலா ரூ.10 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
முருங்கைக்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பது தொடர்பாக காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இரு வாரங்களாக கனமழையும், பனிப்பொழிவுரம் இருந்து வருகிறது. சூரிய வெளிச்சமும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக முருங்கைக்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. அதன்காரணமாக விலை உயர்ந்துள்ளது’’ என்றனர்.