ஸ்ரேயாஸ் ஐயர் கடைசியாக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியது உலகக் கோப்பை 2023. டி20 கிரிக்கெட்டிலும் அவர் இந்தியாவுக்காக ஆடி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆனாலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.26.75 கோடி விலை கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் வாங்கியிருக்கிறது என்றால் ஐபிஎல் லாஜிக் என்பதே ஒரு தனி ரகம் என்றுதான் பொருளா அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் உண்மையில் அவ்வளவு மதிப்பு மிக்க வீரரா என்ற கேள்விகள் பலருக்கும் எழுவது நியாயமே.
சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஆகியோரை விடவும் அதிக விலை கொடுக்கப்பட வேண்டியவரா என்பதும் பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. காரணத்தை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் 2019 முதல் 2021 வரை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தார், இந்தக் காலக்கட்டத்தில் 3 சீசன்களிலும் டெல்லி கேபிடல்ஸ் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. இதில் 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிக்குள் நுழைந்தது. டெல்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக இந்தக் காலக்கட்டத்தில் இருந்த ரிக்கி பாண்டிங், இப்போது பஞ்சாப் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் ஸ்ரேயாஸ் ஐயர் மீதான கிராக்கியை அதிகரித்துள்ளது.
மேலும் கம்பீர் பயிற்சியின் கீழ் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வித்தியாசமான கிரிக்கெட்டை ஆடி கோப்பையை 2024 ஐபிஎல் தொடரில் தட்டிச் சென்றதும் ஸ்ரேயாஸ் ஐயரைப் பிடித்துப் போட அணி உரிமையாளர்களிடையே போட்டப்போட்டி நிலவியது. ஐபிஎல் கோப்பையை வென்ற 8 கேட்பன்களில் ஸ்ரேயாஸ் ஐயரும் ஒருவர் என்பதும் கூடுதல் மதிப்புச் சேர்த்துள்ளது.
பேட்டிங்கிலும் 140 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார், கடந்த 3 சீசன்களில் 35 என்ற சராசரியில் ரன்களை எடுத்துள்ளார்.
அதே போல் வெங்கடேஷ் ஐயரைத் தக்க வைக்காமல் இப்போது ஏலத்தில் அவரை மீண்டும் ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியிருப்பதும் பலருக்கும் விசித்திரமாக இருக்கும். இவரை 5வது கேப்டு வீரராக ரூ.14 கோடிக்கே கொல்கத்தா அணி ரீடெய்ன் செய்திருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் அவர்கள் ரமன் தீப் சிங்கை ரூ.4 கோடிக்கு தக்க வைத்தனர்.
இதனையடுத்து அவர் கழற்றி விடப்பட்டதால் ஆர்சிபி வெங்கடேஷ் ஐயரை தங்கள் பக்கம் இழுக்க கொல்கத்தாவுடன் ஏலத்தில் போட்டாப் போட்டியில் இறங்கியது.
மிட்செல் ஸ்டார்க், கே.எல்.ராகுலை வாங்க ஆர்சிபி போட்டியில் இறங்கி தோல்வி கண்டது. அதனால் வெங்கடேஷ் ஐயரை விடக்கூடாது என்று ரேட்டை ஏற்றிக் கொண்டே வந்தது. கொல்கத்தாவும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுலை ஏலம் எடுப்பதில் தோல்வி கண்டதால் வெங்கடேஷ் ஐயருக்கு கிராக்கி அதிகரித்தது. இதனையடுத்து கொல்கத்தா வெங்கடேஷ் ஐயருக்கு இத்தனை விலை கொடுத்து தக்க வைக்க வேண்டியதாயிற்று.