ஜெட்டா: ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்றுள்ள 574 வீரர்களின் முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆறு வீரர்களில் ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்று வரும் ஏலத்தில் 10 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதில் முதல் வீரராக இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பெயர் அறிவிக்கப்பட்டது.
அவரது அடிப்படை விலை ரூ.2 கோடி. அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க முன்வந்தது. தொடர்ந்து டெல்லி, குஜராத், பெங்களூரு, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் வாங்க முன்வந்தன. அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்டிஎம் முறையில் அவரை வாங்க விரும்புவதாக தெரிவித்தது. ஹைதராபாத் அணி ரூ.18 கோடி என தெரிவித்த சூழலிலும் அந்த தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. அவர் கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
‘கேப்டன்’ ஸ்ரேயஸ் ஐயர்: கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தவர் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர். அவரை அந்த அணி தக்க வைக்கவில்லை. இந்நிலையில், ஏலத்தில் பங்கேற்ற அவரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. அவரது அடிப்படை விலை ரூ.2 கோடி. கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி அணிகள் அவரை ஏலத்தில் வாங்கி முன்வந்தன.
ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட ரிஷப் பந்த்: இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்தும் ஏலத்தில் பங்கேற்றுள்ளார். அவரது அடிப்படை விலை ரூ.2 கோடி. லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் அவரை வாங்க ஆர்வம் காட்டின. ரூ.20.75 கோடியில் இருந்த போது டெல்லி அணி ஆர்டிஎம் மூலம் அவரை வாங்க முன்வந்தது. அப்போது ரூ.27 கோடி என விலையை லக்னோ அணி உயர்த்தியது. அதனால் டெல்லி விலக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரை ஏலத்தில் வாங்கியது. ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக பந்த் இப்போது அறியப்படுகிறார். அவர் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட வாய்ப்புள்ளதாக தகவல்.
இதே பிரிவில் இடம்பெற்றிருந்த பட்லர் ரூ.15.75 கோடிக்கும் (குஜராத் டைட்டன்ஸ்), ஸ்டார்க் ரூ.11.75 கோடிக்கும் (டெல்லி கேபிடல்ஸ்), ரபாடா ரூ.10.75 கோடிக்கும் (குஜராத் டைட்டன்ஸ்) அணிகளால் வாங்கப்பட்டனர்.