சென்னை: ஃபிட் இந்தியா வாரத்தை முன்னிட்டு கல்லூரிகளில் உடல்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு மக்கள் உடல் நலனை மேம்படுத்தி வலுவான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் ஃபிட் இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2019ம் ஆண்டு தொடங்கி வைத்தார். உடல் நலத்தை பேணும் வகையில் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றுதே இதன் நோக்கமாகும். இந்த திட்டத்தை உயர்கல்வி நிறுவனங்களில் சிறப்பாக செயல்படுத்த வேண்டுமென பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”நாட்டில் உள்ள அனைத்து அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்களது மாணவர்களுக்கு யோகா, தற்காப்புக் கலைகள், நீச்சல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
நடப்பாண்டு நவம்பர் 15 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை ஃபிட் இந்தியா இயக்க வாரம் அனுசரிக்கப்பட்டவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மேற்கண்ட காலக்கட்டத்தில் 4 முதல் 6 நாள்கள் வரை மாணவர்களுக்கான உடற்பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளை அதற்கான வழிகாட்டுதல்களுடன் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் ஃபிட் இந்தியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.