‘தொலைக்காட்சியில் பொழுதுபோக்காளராக மக்கள் பார்த்தார்கள். அதையே திரையுலகிலும் செய்யத் தொடங்கினேன்’ என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் நடிகர்கள், இயக்குநர்களின் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில் குஷ்பு – சிவகார்த்திகேயன் இடையிலான உரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் குஷ்புவின் கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் பதிலளித்தார்.
அப்போது திரையுலகில் நடிகராக வலம் வருவது குறித்த கேள்விக்கு சிவகார்த்திகேயன், “தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் என்று எனக்கு முன்பாக எந்தவொரு உதாரணமும் இல்லை. ஆகையால் எந்தவொரு வாய்ப்பு வந்தாலும் அதற்கு 100% உழைத்தேன். எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதை வைத்து மக்களை மகிழ்விக்க தொடங்கினேன். மக்கள் என்னை தொலைக்காட்சியில் பொழுதுபோக்காளராக பார்த்தார்கள். அதையே திரையுலகிலும் செய்யத் தொடங்கினேன்.
தொலைக்காட்சியோ, சினிமாவோ நகைச்சுவையை எனது கவசமாக பயன்படுத்தினேன். அது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை உணர்ந்தேன். ஆரம்பத்தில் இருந்து சினிமாதான் என் ஆசை. தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தேன். அது தான் திரையுலகில் நுழைவதற்கு வாய்ப்பு கொடுத்தது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சினிமாவை நேசிப்பது குறித்து சிவகார்த்திகேயன், “நான் மிகப் பெரிய ரஜினி சார் ரசிகன். ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது முதல் இரண்டு நாட்களுக்குள் திரையரங்குகளில் பார்த்துவிடுவேன். 2006-ம் ஆண்டு முதல் எந்தவொரு படத்தையும் திருட்டு பதிப்பில் பார்த்ததில்லை. அந்தளவுக்கு சினிமாவை நேசிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.