“ஏனுங்க… வணக்கமுங்க…” என்று ‘ங்க’ என்கிற அழகிய கொஞ்சும் தமிழில் யாரேனும் நம்மிடம் அறிமுகம் செய்துகொண்டால், அவர்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். முதல் அறிமுகத்திலேயே கொங்கு மக்களின் பணிவு கனிந்த அன்பு அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகிவிடும். கோவை மக்களின் கொங்கு தமிழும், விருந்தோம்பலும், மரியாதை மிகுந்த கலாச்சாரமும், தனித்துவமிக்க பண்பாடும் உலகெங்குமுள்ள தமிழ் மக்களால் பெரிதும் விரும்பப்படும் சிறப்புக்குரியவை. | நவம்பர் 24 – கோவை தினம் |
கொங்கு மண்டலத்தின் இதயமென அழைக்கப்படுவது கோயம்புத்தூர் நகரமாகும். இந்நகரமானது ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன் ஒரு கோயில், சிறிய கோட்டை, அதைச் சுற்றி நான்கைந்து வீதிகள், அதையொட்டி சில சந்துகள் என சில ஏக்கர் பரப்பில் மட்டுமே இருந்தது. ஆனால், கடந்த ஒரு நூற்றாண்டில் இது பரந்து விரிந்து, அபார வளர்ச்சி பெற்றுத் திகழ்கிறது எனில் மிகையில்லை. வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான சி.ஆர்.இளங்கோனிடம் கோவையைப் பற்றிய வரலாறைச் சொல்லுங்கள் எனக் கேட்டால், மடை திறந்த வெள்ளமென தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
“இந்த நூற்றாண்டில் கோயம்புத்தூர் நகரம் இத்தனை முன்னேற்றம் அடைந்திருந்தாலும், இதன் வேர்கள் மிகப் பழமையானவை. தற்போதைய கோவை நகரம் பல்வேறு மதம், இனம், மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதியாகத் திகழ்கிறது. வெள்ளையர் ஆட்சியில், 1800-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் முறைப்படுத்தப்பட்ட இத்தகு வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. 1832-இல் முதல் கிறிஸ்தவ மிஷனரி கோவை வந்த பின், தேவாலயங்கள் கட்டப்பட்டன. ஹைதர், திப்புசுல்தான் ஆட்சியின்கீழும் கோவை இருந்துள்ளது. தமிழ் பேசுபவர்களைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுவோரும் கோவையில் மிகுந்துள்ளனர். பல ஆட்சியாளர்களால் ஆளப்பட்டிருந்தாலும், இங்கு குடியமர்ந்த பல்வேறு மக்களால் உருவாக்கப்பட்ட பகுதியாகவே கோவை திகழ்கிறது.
வணிக முக்கியத்துவம் பெற்ற பகுதியாகவும், ‘பெருவழி’ எனப்படும் நெடுஞ்சாலைகள் இருந்த பகுதியாகவும் கோவை திகழ்ந்துள்ளது என்பதை பெரும்பாணாற்றுப்படை, பரிபாடல், முல்லைத்திணை, அகநூனூறு உள்ளிட்ட சங்க கால நூல்கள் மூலம் அறியலாம். சோழ நாட்டிலிருந்து சேர நாடு வரை ஒரு நெடுஞ்சாலை, கொங்கு நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு ஒரு நெடுஞ்சாலை,மைசூர் பகுதிகளுக்குச் செல்ல மூன்று பெருவழிகள், பேரூர் தொடங்கி பாலக்காட்டு கணவாய் வழியே சேர நாடு செல்லும் சாலை என நெடுஞ்சாலைகள் மிகுந்த பகுதியாக கோவை இருந்துள்ளது.
கொங்கு நாட்டின் தொன்மைச் சிறப்புகளை விளக்கும் பல்வேறு பெருங்கற்கால சின்னங்கள் கிடைத்துள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புன்செய் வேளாண்மை இருந்ததற்கான ஆதாரங்கள் அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. சங்ககாலம் தொட்டு பல்வேறு மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டிருந்தாலும், 9-ம் நூற்றாண்டு வரை கோவை நகரப் பகுதியில் அதிக அளவில் மக்கள் குடியேற்றம் இருந்ததற்கான உறுதியான சான்றுகள் இதுவரை அகப்படவில்லை. எனினும், கொங்கு சோழர்களும், கொங்கு பாண்டியர்களும் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
1800-இல் கோவை நகரப் பகுதியில் சுமார் 2,000 பேர்தான் வசித்துள்ளனர். 1850-க்குப் பிறகுதான் கோவை நகரம் பெரிதும் வளரத் தொடங்கியது. பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், ரேஸ்கோர்ஸ், சிறைச்சாலைக் கட்டிடம், ரயில் போக்குவரத்து, சாலை வசதிகள் என உள்கட்டமைப்பு வசதிகள் பெருகின. 1865-இல் கோவை நகரம் நகராட்சியானது. கோவை வழியாக கொச்சியை இணைக்கும் ரயில் பாதை அமைக்கப்பட்டு, பல வளர்ச்சித் திட்டங்களுக்கு வித்திடப்பட்டது. விவசாய விளைபொருட்கள், தேயிலை, காபி போன்றவற்றை வணிகப் பரிமாற்றம் செய்யும் இடமாக கோவை மாறத் தொடங்கியது. பஞ்சாலைகளும் தொடங்கப்பட்டன.
1900-க்கும் பிறகு, பிளேக், காலராவால் மக்கள் பாதிக்கப்பட்டனர் .இதனால், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், ராம்நகர் பகுதிகள் உருவாக்கப்பட்டு, நகரம் விரிவடைந்தது. 1929-இல் சிறுவாணி திட்டம் முடிவடைந்து, குடிநீர்ப் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. 1930-இல் கிடைத்த பைக்காரா மின்சாரம் மூலம் தொழில் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டது.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சாலைத் தொழில் வளர்ச்சி, கோவையின் தொழில் வளர்ச்சியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. திரட்டப்பட்ட மூலதனம், தொழில்முனைவோரின் துணிச்சல், திறன்வாய்ந்த தொழிலாளர்கள், தொழில்நுட்ப வளர்ச்சியை கோவை மக்கள் கையாண்ட விதம் என அனைத்தும் சேர்ந்து கோவையை ஒரு தொழில் நகரமாக மாற்றியது.
1950-களுக்குப் பிறகு கோவை நகரம் மேலும் விரிவடைந்தது. பின்னர் மாநகராட்சியாக உருவானது. கல்வி, தொழில்நுட்பத்துக்காக விதைக்கப்பட்ட விதைகள் பெரும் விருட்சமாகி, கோவை நகரைப் பிரம்மாண்ட வளர்ச்சியடையச் செய்தன. சிறு, குறுந்தொழில்கள், கல்வி, மருத்துவம், சுற்றுலா, மென்பொருள் துறை என இன்று எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைந்து, பன்முகங்கள் கொண்ட மாநகரமாக காட்சியளிக்கிறது கோவை” என்று ஏராளமான வரலாற்றுச் செய்திகளைப் பெருமிதத்தோடு கூறுகிறார் சி.ஆர்.இளங்கோவன்.
தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி மற்றும் வடமேற்குப் பகுதியை உள்ளடக்கிய இந்த கொங்கு மண்டலமானது. 60,895 கிமீ 2 (23,512 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டதாக உள்ளது. இந்த கொங்கு மண்டலமானது கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய முக்கிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக விளங்குகிறது. கோவை என்று சுருக்கமாக அழைக்கப்படும் கோயம்புத்தூருக்கு இப்பெயர் வரக்காரணம் என்னவென்று ஆராயத் தொடங்கினால், அதற்கான சரியான சான்றாதாரங்கள் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
“சங்க காலத்தில் கோசர் என்ற குலத்தவரால் உருவாக்கப்பட்டதால் கோசர்புத்தூர், கோசம்புத்தூர் என்று பெயர் வந்தது என்கிறார் வரலாற்று அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி. கோனன் என்ற வேட்டுவர் தலைவனின் மகள்களான கோணி, முத்தா ஆகியோருக்கு அளிக்கப்பட்ட ஊர் என்பதால், கோணி முத்து ஊர், கோணமுத்தூர் என்றாகி, பின் கோயமுத்தூராக மருவியது” என்கிறார் எஸ்.பி.நரசிம்லு நாயுடு. கோனியம்மன் புதூர், கோணம்புத்தூராகி, கோயமுத்தூராகியது என்றும் செவிவழிச் செய்தி உண்டு. கோவன் என்ற இருளர் தலைவன் பெயரில் கோவன்புத்தூர் உருவாகியது என்றும் கூறுகிறார்கள்.
கொங்குச் சோழன் எனப்படும் விக்கிரமச்சோழன், வீரகேரளன் எனப்படும் வீரநாராயணன் காலத்து கல்வெட்டுகளில் கோவன்புத்தூர் என்ற சொல் உள்ளது. அந்தக் காலக்கட்டத்தில் பெரிய நகரமான பேரூரின் ஒரு பகுதியாக கோவை இருந்திருக்க வேண்டும். கோவை மாநகர் என்ற பெயர் அருணகிரிநாதரால் 15-ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 1773-இல் எழுத்தப்பட்ட செப்பேடு ஒன்றில் கோவன்புத்தூர் என்றும், 1761-இல் எழுத்தப்பட்ட செப்பேட்டில் கோயமுத்தூர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றிலிருந்து கோயம்புத்தூர் என்ற பெயர் உருவாகியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.