பள்ளி ஆசிரியர் வசந்தின் (ரகுமான்) மகள் பார்வதி (அம்மு அபிராமி), காணாமல் போகிறார். வசந்தும் பார்வதியை ஒருதலையாகக் காதலிக்கும் ஸ்ரீயும் (துஷ்யந்த்) அவரைத் தேடுகிறார்கள். இதற்கிடையே இயக்குநராகும் கனவில் இருக்கும் வெற்றி (அதர்வா), தனது கதையைத் திருடி முன்னணி இயக்குநர் (ஜான் விஜய்) படம் இயக்குவதைத் தெரிந்துகொள்கிறார். அது தனது கதை என்பதை நிரூபிக்கத் தேவையான ‘ஸ்க்ரிப்ட் காப்பி’ தொலைந்துவிடுகிறது.
வெற்றியின் தந்தையும் காவல்துறை அதிகாரியுமான செல்வம் (சரத்குமார்) அமைச்சரின் (சந்தான பாரதி) மகன்களைக் கைது செய்வதால் சிக்கல்களை எதிர்கொள்கிறார். பார்வதிக்கு என்ன ஆனது? வெற்றியின் ஸ்க்ரிப்ட் கிடைத்ததா? இந்தக் கதாபாத்திரங்களுக்கு என்ன தொடர்பு? என்கிற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக் கதை.
’துருவங்கள் 16’ மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் நரேன், இதை எழுதி இயக்கியுள்ளார். ஒரே இரவில் நடக்கும் வெவ்வேறு சம்பவங்களையும், அவற்றுடன் தொடர்புடைய மனிதர்களையும் 3 நிறங்களாகப் பிரித்து, நிகழ்வுகளை முன்பின்னாக அடுக்கிக் காண்பிக்கும் திரைக்கதைப் பாணியைக் கையில் எடுத்திருக்கிறார். அது முதல் பாதி திரைக்கதையை மட்டும் தொய்வின்றி நகர்த்தக் கைகொடுத்திருக்கிறது.
கதையிலோ, கதாபாத்திரங்களுடனோ உணர்வுப்பூர்வமாக ஒன்ற முடியாததால் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்கிற மனநிலைக்குப் பார்வையாளர் கள் வந்துவிடுகிறார்கள். நல்லவர்கள், தீயவர்கள், நன்மையும் தீமையும் கலந்தவர்கள் என மனிதர்கள் 3 விதமாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தவே நிறங்கள் மூன்று என்று தலைப்பு வைத்திருப்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் படத்தில் அதை அழுத்தமாகச் சொல்லவில்லை.
திரைக்கதையில் சில ஐடியா ரசிக்க வைத்தாலும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நல்லவர்களாகத் தெரிபவர்களிடம் கொடிய குணங்களும் கொடியவராகத் தோன்றுபவர்களிடம் நல்ல குணங்களும் இருக்கக் கூடும் என்பதைச் சொல்லும் இறுதிப் பகுதி ஓரளவு ரசிக்க வைக்கிறது. அதற்கு முந்தைய பகுதிகளும் அதே அளவு மெனக்கெடலுடன் எழுதப்பட்டிருந்தால் படம் நிறைவை அளித்திருக்கும்.
காதலித்த பெண்ணைத் தேடி அலையும் கதாபாத்திரத்தில் துஷ்யந்த், பொருந்துகிறார். போதை மருந்து உட்கொண்ட நிலையில் அதர்வா வெளிப்படுத்தும் உணர்வுகள் கவனம் ஈர்க்கின்றன. பதற்றத்தையும் கவலையையும் அளவாக வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் ரகுமான் முதிர்ச்சியான நடிப்பைத் தந்திருக்கிறார். துணிவும் கிண்டலும் மிகுந்த காவல்துறை அதிகாரியாக சரத்குமார், ரசிக்க வைக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும் தாக்கம் செலுத்தும் நடிப்பைத் தந்திருக்கிறார் அம்மு அபிராமி. சின்னி ஜெயந்த், ஜான் விஜய் போன்றோர் குறையற்ற நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை, காட்சிகளுக்கு வலுவூட்டியிருக்கிறது. பெரும்பாலும் இரவு நேரத்தில் நடக்கும் திரைக்கதைக்கு டிஜோ டாமியின் ஒளிப்பதிவு நியாயம் செய்திருக்கிறது. திரைக்கதையை குழப்பமின்றி நகர்த்த உதவியிருக்கிறது ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு. அதர்வாவின் கற்பனை உலகங்களின் காட்சிகளில் ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், டிஐ கலரிங் பணிகள் கவனம் ஈர்க்கின்றன.
புதுமையான திரைக்கதைப் பாணியுடன் சமகாலப் பிரச்சினைகளைப் பேசி மனிதர்களின் வெவ்வேறு நிறங்களைப் பதிவு செய்வதற்கான இந்த முயற்சி ஆழமில்லாத கதை, சுவாரஸியமற்ற திரைக்கதை ஆகியவற்றால் அரைகுறை முயற்சியாகத் தேங்குகிறது.