சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் குடிநீர் தேவையை கருத்தில்கொண்டு பம்பை முதல் சந்நிதானம் வரை ‘சபரி தீர்த்த’ குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு, அவற்றை வனத் துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையின் தொடக்க நாட்களில் கூட்டம் குறைவாக இருந்தது. தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பம்பையிலிருந்து சந்நிதானம் செல்லும் பாதையில் அதிக பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக கேரள நீர் ஆணையமும், தேவஸ்தானமும் இணைந்து பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளன.
இதன்படி, பம்பை முதல் சந்நிதானம் வரையிலான 7 கி.மீ. தூரத்தில் ஆங்காங்கே குடிநீர் குழாய்களை அமைத்து ‘சபரி தீர்த்தம்’ என்ற பெயரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பம்பை நதியில் உள்ள உறை கிணறுகளிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் 3 இடங்களில் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் ஒரு மணி நேரத்தில் 35 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பு செய்ய முடியும்.
இந்நிலையில், பம்பையின் நுழைவு வாயிலில் பசுமை சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு செல்ல தடை இருப்பதை சுட்டிக்காட்டும் வனத் துறையினர், பாதையின் நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள ‘சபரி’ தீர்த்தத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறும்போது, “சுமையை குறைப்பதற்காக கடையில் விற்கப்படும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை வாங்கி வருகிறோம். இதை வனத் துறையினர் பறிமுதல் செய்கின்றனர். சந்நிதானம் செல்லும் வழியில் திடீரென தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க முடியவில்லை.
சபரி தீர்த்த குடிநீர் குழாய் எங்கிருக்கிறது என்று தேடிச் செல்ல வேண்டியுள்ளது. பல இடங்களில் டம்ளர் வசதியில்லை. குழாயிலிருந்து நேரடியாக கையில் தண்ணீரை பிடித்து குடிப்பது சிரமமாக இருக்கிறது. சில நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. சந்திதானத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும்போது, போதிய குடிநீர் கிடைப்பதில்லை. எனவே, பாட்டிலில் குடிநீர் வைத்திருக்க அனுமதித்தால் எங்களுக்கு வசதியாக இருக்கும்” என்றனர்.
இது தொடர்பாக தேவசம்போர்டு அதிகாரிகளிடம் கேட்டபோது, “தண்ணீரை குடித்துவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை வனப் பகுதியில் வீசுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், அவற்றை வனத் துறையினர் மூலம் பறிமுதல் செய்து வருகிறோம். அதேநேரம், பக்தர்கள் மறு உபயோகத்துக்கு பயன்படுத்தும் வகையிலான, பிளாஸ்டிக் இல்லாத பெரிய கேன்களில் தண்ணீர் எடுத்து வருவதற்கு தடை இல்லை. நடந்த செல்லும் வழியில் உள்ள குழாய்களிலிருந்து இந்த கேன்களில் தண்ணீரை பிடித்துக் கொள்ளலாம்” என்றனர்.