தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக கோவை வளர்ந்துள்ளது. தொழில், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்று பலவித காரணங்களுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவையில் வாடகை வீட்டில் வசித்து வரும் எல்லோருக்கும் சொந்த வீடு வாங்கிக் குடியேற வேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும்.
ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மாதாந்திரச் சம்பளம் கைக்கும், வாய்க்கும், வரவுக்கும், செலவுக்கும் சரியாக அமையும். வாழ்க்கையில் வீடு என்பது தொடர்ந்து வரும் கனவாக அமைந்து விடுகிறது. கையில் இரண்டு லட்சம் புரட்ட முடியும் என்னும்போது வீட்டின் விலை நான்கைந்து லட்சங்களாக இருக்கும். கையில் நான்கைந்து லட்சங்கள் வந்து விழும் போது வீட்டின் விலை பத்து இருபது லட்சங்களைத் தொட்டு நிற்கும்.
எலி வளை என்றாலும் தனி வளை வேண்டும் என்னும் பழமொழி செல்லும் இடங்களில் எல்லாம் எதிரொலிக்கும். இப்போதெல்லாம் வீடு வாங்க வங்கிகள் கடன் வழங்கத்தான் செய்கின்றன. ஆனாலும் வீடு வாங்க இயலாமை தொடர்வது எதனால்? யோசித்தால் ஒரு சில காரணங்கள் தெரியவரும்.
ஓரிடத்தில் வசித்துப் பழகிவிட்டால் அங்கேயே வீடு வாங்க வேண்டும் என ஆசை கொள்வோம். ஆனால், அங்கு வீட்டின் விலை நாம் தொட முடியாத உயரத்தில் நிலைத்து நிற்கும். இல்லையெனில் நாம் தொடக்கூடிய விலைக்குள் அடங்கும் வீடுகள் நம்மை விட்டுத் தொலைவான இடத்தில் இருக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த இரண்டு காரணங்களால் தான் வீடு வாங்கும் ஆசை கை நழுவிக்கொண்டே இருக்கும்.
வழக்கமாக நாம் என்ன செய்கிறோம்? நமக்குக் கட்டுப்படியாகும் விலையில் வீடு வரட்டும் என்று காத்திருக்கிறோம். ஆனால், நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கும் ஒரு நாட்டில் இது சாத்தியமா? நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் இதற்கு ஒருபோதும் வாய்ப்பே இல்லை. நமது பொருளாதாரம் மேம்பட்ட பின்னர் வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்னும் நினைப்பில் முன்பைவிட ஓடி ஓடி உழைக்கிறோம். ஆனால் அந்த வேகத்தைவிட அதிகமாக வீட்டின் விலையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.
உதாரணமாகப் பத்து லட்சம் மதிப்புள்ள வீடு நமது கனவு என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நம்மால் ஐந்து லட்சம் ரூபாய்தான் புரட்ட முடியும் என்னும் சூழலில் இன்னுமொரு ஐந்து வருடங்களில் பத்து லட்சம் புரட்டிவிடலாம் என்று நினைத்து வீடு வாங்குவதைத் தள்ளிப்போடுவோம். ஆனால் ஐந்து வருடங்கள் கழித்து அதே வீட்டின் விலை பத்து லட்சமாகவா இருக்கும்? அது இருபது இருபத்தைந்து என்று உயர்ந்திருக்கும்.
ஆக, வீடு வாங்குவது நமது கனவு எனில் தாமதம் அவசியமல்ல. நமது பட்ஜெட்டுக்கு ஏற்ற வீட்டை உடனே வாங்க வேண்டும். நாம் குடியிருக்கும் பகுதியிலேயே நமது பட்ஜெட்டுக்குத் தக்க சிறிய வீட்டைக்கூட வாங்கலாம். அல்லது சற்றுத் தொலைவில் என்றாலும் பரவாயில்லை.
நம்மிடம் உள்ள தொகைக்கேற்ற வீட்டை உடனடியாக வாங்க வேண்டும். கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடு என்றால்கூட வாங்கிவிடலாம், அது குடியேறத் தகுதி பெறும் வரை நமது செலவுகளைக் கொஞ்சம் சமாளித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
நாளாக நாளாக வீட்டின் விலை உயர்ந்து கொண்டேயிருக்கும். ஒருபோதும் வீட்டின் விலை குறையப்போவதே இல்லை. கனவு இல்லத்தை மட்டுமே வாங்குவேன் என்று காத்திருக்காமல் வீடென்ற கனவை நனவாக்குவதே நல்லது.