திரையுலக பிரபலங்கள் இடையே விவகாரத்து நிகழ்வுகள் நடந்தால்போதும், உடனே சோஷியல் மீடியாக்களுக்கு றெக்கை முளைத்துவிடுகின்றன. அதைப் பற்றி கருத்துச் சொன்னால்தான் அன்றைய பொழுதே போனது மாதிரி நெட்டிசன்களுக்கு ஆகிவிடுகிறது. விவாகரத்து தொடர்பான தகவல்கள் காதுக்கு எட்டியவுடன் தங்களுடைய அறிவுரைப் புராணங்களை ஆரம்பித்து விடுகிறார்கள்.
உருக்கமான பதிவுகளால் மட்டுமல்லாமல் யார் மீது தவறு என்று பட்டிமன்றமும் நடத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் ஜட்ஜ்மென்டே எழுதி, இதற்கு இவர்தான் காரணம் என்று பிரபலத்தின் முழு தகவல்களையும் இழுத்து வந்து கட்டுக்கதைகளையும் எழுதுகிறார்கள். சம்பந்தப்பட்ட பிரபலங்கள், விவாகரத்து தங்களின் தனிப்பட்ட விவகாரம், அதற்கு மதிப்பளியுங்கள் என வேண்டுகோள் விடுத்த பிறகும் அதை பொதுவிவாதமாக மாற்றும் போக்குக் குறைந்தபாடில்லை.
“எங்களுக்காக நீங்கள் சேர்ந்து வாழ வேண்டும்” என்றெல்லாம் ரசிகர்கள் பதிவிடுவதைக் காண முடிகிறது. தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் – சாய்ரா பானுவின் விவாகரத்தையும் இணையவாசிகள் அப்படித்தான் அசைபோட ஆரம்பித்திருக்கிறார்கள். வெறும் வாய்க்கு அவல் கிடைத்தால் சும்மா விடுவார்களா?
ரஹ்மான் – சாய்ரா பானு உருக்கம்: இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இயக்கி 1992-ல் வெளியான ‘ரோஜா’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். ஆஸ்கர் நாயகன் என கொண்டாடப்படும் இவர், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் இசை அமைத்து வருகிறார். ‘ஸ்லம்டாக் மில்லினர்’ என்ற ஆங்கில படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்தார்.
ரஹ்மான் கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பானுவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள், அமீன் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார். இவர்களின் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இதுபற்றி சாய்ரா பானு தரப்பில் அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்கள் கழித்து, தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரியும் கடினமான முடிவை சாய்ரா பானு எடுத்துள்ளார். அவர்கள் உறவில் ஏற்பட்டுள்ள உணர்ச்சிபூர்வ அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தபோதும் இருவருக்கும் இடையே சிரமங்களும் தீர்க்க முடியாத இடைவெளியும் உருவானது. மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த சவாலான தருணத்தில் அவரின் தனிப்பட்ட உணர்வுக்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
சாய்ரா வழக்கறிஞரின் அறிக்கை வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாங்கள் 30 வருடத்தை எட்டி விடுவோம் என்று நம்பினோம். ஆனால், எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத்தான் இருக்கிறது.
உடைந்த மனங்களின் எடையில் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கக் கூடும். இருந்தாலும் இந்த சிதறலில், உடைந்த துண்டுகள் சேராமல் போனாலும் நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம். இந்த பலவீனமான அத்தியாயத்தை கடக்கும் போது உங்களுடைய கனிவுக்கும், எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மதிப்பதற்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.