திருப்பூர்: “சரியான முறையில் விமர்சனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அதை விடுத்து தரமற்ற முறையில் செய்யப்படும் விமர்சனங்களால், தொடர்ந்து திரைத் துறை மற்றும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதால்தான் எதிர்ப்பு குரல் எழுப்பப்படுகிறது. திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்கள் விமர்சனத்தை எங்களால் தடுக்க முடியாது என்றாலும், சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுக உள்ளோம்” என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
எதிர்மறை விமர்சனங்களால் ‘கங்குவா’ திரைப்படம் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், திரையரங்க வளாகங்களில் யூடியூப் சேனல்கள் படம் தொடர்பான விமர்சன பேட்டிகளை எடுக்க கூடாது என திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். இதற்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இன்று (நவ. 21) செய்தியாளர்களிடம் கூறும்போது, “விமர்சனங்களுக்கு தடைவிதித்தால் யூடியூபர்ஸ் பாதிக்கப்படுவார்கள் என்று நினைத்தால், ஒட்டுமொத்த திரைத் துறையும் பாதிக்கப்படும்.
விமர்சனம் என்ற பெயரில் தனிமனித தாக்குதல் செய்யும் ரசிகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு என்ற பாரதிராஜா கருத்தை ஆமோதிக்கிறேன். விமர்சனம் செய்து வருவாய் ஈட்டும் யூடியூபர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டால், ஒட்டுமொத்த திரைத் துறையும் பாதிக்கப்படும். சென்னையில் அடுத்த வாரம் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் சினிமா விமர்சனங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
மேலும், சில படங்கள் விமர்சனங்கள் மூலமாகவே வெற்றி பெற்றுள்ளது. சரியான முறையில் விமர்சனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அதை விடுத்து தரமற்ற முறையில் செய்யப்படும் விமர்சனங்களால், தொடர்ந்து திரைத்துறை மற்றும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதால் தான், எதிர்ப்பு குரல் எழுப்பப்படுகிறது. அனைத்து திரையரங்குகளுக்கும், திரையரங்க வளாகத்தில் விமர்சனம் எடுக்க அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம்.
திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்களின் விமர்சனத்தை எங்களால் தடுக்க முடியாது என்றாலும், சட்ட ரீதியாக இந்தப் பிரச்சினையை அணுக உள்ளோம். இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் வெளியான ’பிளடி பெக்கர்’ திரைப்படம் விநியோகஸ்தருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய நிலையில், நஷ்டம் ஏற்பட்ட முழு தொகையையும் நெல்சன் திருப்பிக் கொடுத்துள்ளார். அவரது இந்த செயல் பாராட்டுக்கு உரியது” என்றார்.