சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.57,000-த்தை தாண்டியது. ஒரு பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.57,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை இறங்குமுகமாக காணப்பட்டு வந்தது. பவுனுக்கு ரூ.3,000 வரை குறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் விலை உயர்ந்து வருகிறது.
கடந்த 20-ம் தேதி 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,115 ஆக இருந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.56,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று மீண்டும் ரூ.57,000-த்தை தாண்டியது. 22 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.57,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.7,145-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.61,200 ஆக இருந்தது.
அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.101 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது. தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமாரிடம் கேட்டபோது, ” தங்கத்தின் தேவை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலை உயர முக்கியக் காரணம் ஆகும். வரும் நாட்களில் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக காணப்படும்” என்றார்.