சென்னை: தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் 24-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 24-வது பட்டமளிப்பு விழா, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில் மொத்தம் 588 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அதில் 437 பேருக்கு விழா மேடையில் நேரடியாக பட்டங்கள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்த மாணவி திலக ஈஸ்வரி ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியதற்காகவும், பட்டப் படிப்பில் அதிக மதிப்பெண் பெற்றதற்காகவும் மொத்தம் 14 பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றார். அந்த மாணவியை ஆளுநர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.
ஆண்டறிக்கையை வெளியிட்டு பல்கலைக்ககழக துணைவேந்தர் மருத்துவர் செல்வகுமார் பேசுகையில், “தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் 647 பேராசிரியர்கள், 915 நிர்வாகப் பணியாளர்கள், 2,978 மாணவர்களைக் கொண்ட முதன்மையான கல்வி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. கல்வியை வழங்குவதோடு மட்டும் இல்லாமல், ஆராய்ச்சி நடவடிக்கைகளும் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசில் இனக் கோழிகள், தோடா எருமை இனம், சாந்திநல்லா ஆடு இனங்களை பாதுகாப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதற்காக தேசிய அளவிலான சிறப்பு விருதுகளை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
தற்போது பல்கலைக்கழகத்தில் ரூ.218.05 கோடி மதிப்பிலான 195 ஆராய்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகளை பாதுகாக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், மரபியல் வளங்களை பாதுகாக்கவும் இந்த ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
கால்நடை உற்பத்தியை மேம்படுத்துதல், நோயறிதல் தொழில்நுட்பம், விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களுக்கு தீர்வு காணுதல் போன்றவைகள் தொடர்பாக மட்டும் 89 ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது” என்றார்.
சிறப்பு விருந்தினர் அறிவுரை: சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத் தலைவர் மருத்துவர் வி.ராம் பிரசாத் மனோகர் பேசுகையில், “கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்ற பெருமை எனக்கு எப்போதும் உண்டு. கால்நடை மருத்துவப் படிப்பை படிக்கும் போது நான் சராசரி மாணவனாகவே இருந்தேன். பின்னர், மத்திய அரசின் இளம் விஞ்ஞானி ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஆய்வுகளை சமர்ப்பித்து தொடர் தோல்விகளை எதிர்கொண்டேன். ஆனாலும், விடாமுயற்சியால் ஊக்கத்தை கைவிடாமல் ஐஏஎஸ் தேர்வை 7 ஆண்டுகள் போராடி வென்றேன். அரசுப் பள்ளியில் படித்து ஐஏஎஸ் ஆக முடியும் என்பதற்கு நான் உதாரணம்.
இப்போது பட்டம் பெற்றுள்ள இளைஞர்களை, உலக வாழ்க்கை வரவேற்க காத்திருக்கிறது. நம்மை சுற்றி பல நெருக்கடியான சூழல் ஏற்படும். அப்போது மாணவர்கள் தைரியான முடிவுகளை எடுக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் தைரியமான முடிவுகள் மிக அவசியம் ஆகும். மதிப்பெண்கள் வெறும் எண்கள் மட்டும் தான். உங்கள் திறமைகளை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டும்” என்றார்.
அமைச்சர் புறக்கணிப்பு: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழில், பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை. சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்ட விவகாரத்துக்கு பின்னர், ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை அமைச்சர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.