ட்ரம்ப் பதவியேற்பு நெருங்குவதால் பிட்காயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று, (நவ.21) முதல்முறையாக பிட்காயின் விலை 97,000 டாலரை எட்டியுள்ளது. அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே ஏற்றம் கண்டு வரும் பிட்காயின், இன்று எட்டியுள்ள புதிய உச்சம் கிரிப்டோகரன்ஸி சந்தையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ட்ரம்பின் சமூக ஊடக நிறுவனமான ட்ரூத் சோஷியல் (Truth Social) கிரிப்டோ வர்த்தக தளமான Bakkt-ஐ வாங்குவதற்கான தகவல் வெளியானதை தொடர்ந்து இந்த புதிய எச்சம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ட்ரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்கிரார். அவர் அமெரிக்க அதிபராவது இது இரண்டாவது முறையாகும்.
இந்நிலையில், ட்ரம்ப் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தைகள் உற்சாகம் கண்டன. தங்கம், வெள்ளி விலையும் மாற்றம் கண்டன. அத்தனையையும் விட கவனம் பெற்றுள்ளது கிரிப்டோகரன்சியின் விலை உயர்வு. அந்தவகையில், உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு இந்த ஆண்டு இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் 40% மேல் மதிப்பு அதிகரித்துள்ளது. இன்றைய மதிப்பு வர்த்தக நேர முடிவில் 97,594.85 அமெரிக்க டாலர் என்றிருந்தது. விரைவில் 1 லட்சம் டாலரை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாறு காணாத உச்சத்தைக் கண்டுள்ள பிட்காயின் கடைசியாக கோவிட் பெருந்தொற்று காலத்தில் வரலாறு காணாத சரிவை சந்தித்தது. அப்போது பிட்காயின் மதிப்பு வெறும் 5000 அமெரிக்க டாலர் என்றளவில் இருந்தது நினைவுகூரத்தக்கது.