புதுடெல்லி: அதானி விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு தனியார் நிறுவனம் தொடர்பான செய்தி இன்று காலை முதல் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்களும் எதிர் குற்றச்சாட்டுக்களும் வந்து கொண்டிருக்கின்றன. தன் மீதான குற்றச்சாட்டுக்களை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும்.
இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, பிரதமர் மோடி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவும், உணர்வுபூர்வமானதாக மாற்றவும் அவர் முயல்கிறார். 2019-ம் ஆண்டிலும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார். காவலரே திருடராகிவிட்டார் என பேசினார். ஆனால், இறுதியில் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று மன்னிப்பு கோரினார். இந்தியாவுக்கும், அதை பாதுகாப்பவர்களுக்கும் எதிராக அவர் தொடுக்கும் தாக்குதல் இது.
ஆவணத்தில் உள்ள விவரங்களின்படி, இந்த வழக்கு ஜூலை 21 முதல் பிப்ரவரி 2022 வரை மாநில மின் விநியோக நிறுவனங்கள் அதானி நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்தது தொடர்பானது. இந்த ஆவணங்கள் பொதுவெளியில் இருப்பவை. யார் வேண்டுமானாலும் அதை படிக்கலாம். நாங்களும் அதை பார்த்தோம். இதில், இரண்டு நிறுவனங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. ஒன்று இந்திய நிறுவனம். மற்றது அமெரிக்க நிறுவனம். இதேபோல், 4 இந்திய மாநிலங்கள் இதில் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன. இந்த முழு விவகாரமும் ஜூலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலகட்டம் தொடர்புடையவை.
வழக்கில் தொடர்புடைய 4 மாநிலங்களும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள். பாஜக அல்ல. ஒன்று சத்தீஸ்கர். இந்த காலகட்டத்தில் அம்மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பெகல். அதானி நிறுவனத்திடம் இருந்து அதிக லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் மாநிலம் ஆந்திரப் பிரதேசம். அந்த மாநிலத்தில் அந்த காலகட்டத்தில் பாஜக ஆட்சியில் அங்கம் வகிக்கவில்லை. அடுத்ததாக தமிழ்நாடு. அங்கும் பாஜக ஆட்சியில் இது நடக்கவில்லை. காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சியில்தான் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இறுதியா ஒடிசா. அப்போது ஒடிசாவை ஆட்சி செய்தது பிஜு ஜனதா தளம். பாஜக அல்ல. ராகுல் காந்திக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றால், பூபேஷ் பெகல் மற்றும் இதர 3 மாநில முதல்வர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். எங்களுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் கிடையாது.
2002-ல் இருந்து ராகுல் காந்தியும், அவரது தாயாரும், அவரது கட்சியும் தொடர்ந்து மோடியின் நம்பகத்தன்மையை அழிக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் முன்வைத்த எந்த குற்றச்சாட்டும் மோடியின் நம்பகத்தன்மையை சிதைக்கவில்லை. ஏனெனில் யார் நம்பகத்தன்மை உடையவர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். ராகுல் காந்தியின் முழு ‘சர்வதேச அமைப்பும்’ இந்தியச் சந்தையை தாக்க விரும்புகிறது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதை காந்தி குடும்பத்தாலும், காங்கிரஸ் கட்சியாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் முன் இந்த விகாரம் எழுப்பப்படட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ராகுல் காந்தி மற்றும் அவரது கட்டமைப்பின் வித்தை மற்றும் நாடகம்.
சத்தீஸ்கர் முதல்வராக இருந்தபோது அதானி குழுமத்திடம் இருந்து ரூ.25,000 கோடி முதலீட்டை பூபேஷ் பாகேல் ஏன் பெற்றார்? ராஜஸ்தான் முதல்வராக இருந்த அசோக் கெலாட், அதானி குழுமத்திடம் இருந்து ரூ.65,000 கோடி முதலீட்டை ஏன் பெற்றார்? கர்நாடகாவில் ரூ.1,00,000 கோடி முதலீடு செய்ய அதானி குழுமத்துடன் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா ஏன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்? அதானி குழுமம் மேற்கு வங்கத்தில் ரூ.35,000 கோடி முதலீடு செய்துள்ளது. தமிழகத்தில் ரூ.4,500 கோடி முதலீடு செய்துள்ளது. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 19 அக்டோபர் 2024 அன்று திறன் மேம்பாட்டிற்காக அதானி அறக்கட்டளையிடமிருந்து ரூ.100 கோடி மானியமாக ஏன் பெற்றார்? இந்தக் கேள்விகளுக்கு காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் பதில் சொல்ல வேண்டும்” என தெரிவித்தார்.
முன்னதாக, இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்துள்ளது. இது, தொழில் துறையில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம்: அதானி மீது லஞ்சம், முறைகேடு குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமெரிக்கா – பின்னணி என்ன?