டென்னிஸ் விளையாட்டுக் களத்தில் இரண்டு தசாப்தங்கள் ஆதிக்கம் செலுத்தியவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜாம்பவான் ரபேல் நடால். தொழில்முறை டென்னிஸ் விளையாட்டுக்கு அவர் ‘குட்பை’ சொல்லி இருந்தாலும் களத்தில் விட்டுச் சென்றுள்ள நினைவுகளை ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாது.
இந்த நூற்றாண்டின் சிறந்த டென்னிஸ் வீரர்களின் பட்டியலில் ரோஜர் பெடரர், ரபேல் நடால், நோவக் ஜோகோவிச் ஆகிய மூவரும் இருப்பார்கள். அவர்கள் மூவரையும் டென்னிஸ் உலக மும்மூர்த்திகள் என்றும் சொல்லலாம். மூவரும் டென்னிஸ் களத்தில் சம காலத்தில் ஒருவருக்கு ஒருவர் போட்டியாளர்களாக சமர் புரிந்தவர்கள். அதுவே அவர்களின் ஆட்டத்திறனுக்கு சான்று. இதில் பெடரர் கடந்த 2022-ல் ஓய்வு பெற்றார். இப்போது நடாலும் ஓய்வு பெற்றுள்ளார்.
பொதுவாக விளையாட்டு வீரர்களின் ஓய்வு முடிவு என்பது அவர்களுக்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கு உணர்ச்சிமிக்க தருணமாகவே இருக்கும். அந்த வகையில் நாம் பார்த்து ரசித்த பேவரைட் ஸ்போர்ட்ஸ் ஐகானின் பிரியாவிடை சற்று நெஞ்சை அதிரச் செய்யும். நடால் ஓய்வு பெற்ற தருணமும் அப்படித்தான் அமைந்தது.
டேவிஸ் கோப்பை தொடருடன் தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த அக்டோபர் மாதம் நடால் அறிவித்தார். ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது விளையாட்டு வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருந்தது. என்னால் வரம்புகள் இல்லாமல் விளையாட முடியும் என்று நினைக்கவில்லை. தகுந்த நேரத்தில் எனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளேன் என்று நினைக்கிறேன்’ என ஓய்வு குறித்து நடால் தெரிவித்தார்.
38 வயதான நடால், ஒட்டுமொத்தமாக 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்துள்ளார். அவரது 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் 14 பிரெஞ்சு ஓபன் பட்டங்களும் அடங்கும். அதுமட்டுமல்லாமல் 92 ஏடிபி தொடர்களிலும் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார். களிமண் களத்தின் ராஜா என்று அறியப்படுபவர்.
1986-ல் ஸ்பெயினில் பிறந்த நடால், 1994 முதல் தொழில்முறை டென்னிஸ் பயிற்சி மேற்கொண்டார். அவரது உறவினர் டோனி நடால் கொடுத்த ஊக்கம் அதற்கு ஒரு காரணம். 1997 முதல் 2000 வரையில் ஜூனியர் அளவிலான போட்டிகளில் பட்டம் வென்றார். 2001-ல் தொழில்முறை டென்னிஸில் அவரது பயணம் தொடங்கியது. அப்போது முதலே அவரது வின்னிங் ரேட் 83 சதவீதமாக இருந்தது.
2003-ல் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன்னில் அறிமுகமானார். 2005-ல் முதன்முதலாக ஒற்றையர் பிரிவில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார். அதுதான் அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம். அப்போது நடாலுக்கு வயது 19. அரை இறுதியில் ரோஜர் பெடரரை வீழ்த்தினார். இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவின் மரியனோவை வீழ்த்தினார்.
20 வயதை எட்டுவதற்குள் 16 ஏடிபி டூர் பட்டங்களை வென்று அசர செய்தார் இடது கை ஆட்டக்காரரான நடால். அதன் பின்னர் 2006-ல் பிரெஞ்சு ஓபன் இறுதியில் ரோஜர் பெடரரை வீழ்த்தினார். 2007 மற்றும் 2008-லும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார். 2008-ல் விம்பிள்டன் மற்றும் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் தங்கத்தையும் வென்றார். அதன் மூலம் ஆடவர் பிரிவில் தரவரிசையில் முதல் இடத்துக்கு முந்தினார். 2009-ல் முதல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2010-ல் முதல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்றார்.
2022-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டம்: கரோனா கெடுபிடிகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் மெத்வதேவ்வை வீழ்த்தினார். அதுவும் முதல் இரண்டு செட்களை இழந்த நிலையில் ஆட்டத்தில் கம்பேக் கொடுத்து நடால் பட்டத்தை வென்றார். அது அவரது விடாமுயற்சிக்கும், போராட்ட குணத்துக்கும் கிடைத்த வெற்றி. அதன்மூலம் அப்போது ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற சாதனையை நடால் எட்டினார்.
2023-ல் காயம் காரணமாக பிரேக் எடுத்தார். 2024-ல் பிரெஞ்சு ஓபனில் முதல் சுற்று ஆட்டத்தில் தோல்வியை தழுவினார். இறுதியாக டேவிஸ் கப் போட்டியிலும் தோல்வியுடன் விடைபெற்றார்.
தனது கடைசி ஆட்டத்துக்கு பின்னர் போட்டியை காண வந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கண்ணீர் மல்க ரபேல் நடால் பேசும்போது, “நான் வென்ற பட்டங்களின் எண்ணிக்கையை மக்கள் அறிந்திருக்கலாம். ஆனால், மல்லோர்காவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதராக நான் நினைவுகூரப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். ஒரு குழந்தையாக எனது கனவை பின் தொடர்ந்து கடினமாக உழைத்தேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. டேவிஸ் கோப்பையில் நான் எனது முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்தேன். தற்போது கடைசி ஆட்டத்திலும் தோல்வி கண்டுள்ளேன். இதன்மூலம் எனது டென்னிஸ் வாழ்க்கை வட்டம் முழுமை பெற்றுள்ளது.
உண்மை என்னவென்றால், இந்த தருணம் வருவதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். நான் டென்னிஸ் விளையாடுவதில் சோர்வடையவில்லை, ஆனால் இதற்குமேல் விளையாட முடியாது என எனது உடல் சொல்லிவிட்டது. இந்த நிலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது பொழுதுபோக்கிலிருந்து ஒரு வாழ்க்கையை உருவாக்க முடிந்ததற்கும், நான் கற்பனை செய்ததை விட நீண்ட காலம் விளையாடியதற்கும் நான் மிகவும் பாக்கியம் பெற்றவனாக உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் ரபேல் நடால் கூறினார்.
தன் சாதனைகளின் மூலம் டென்னிஸ் களத்தில் ஆதிக்கம் செலுத்தி ரசிகர்களை நடால் கவர்ந்தார். இப்போது இது அனைத்தும் பசுமையான நினைவுகளாக மாறி உள்ளன.