சென்னை: ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்-2024’ கடந்த அக்.28 முதல் நவ.3-ம் தேதி வரை கடைபிடிக்கப் பட்டது. இதையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளிடையே ஊழல் எதிர்ப்பு குறித்த சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 6 முதல்8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஜூனியர் பிரிவில் ஓவியப் போட்டியும், ‘வளமான தேசத்துக்கு நேர்மை எனும் கலாச்சாரம்’எனும் கருப்பொருளில் பள்ளி ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டது.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சீனியர் பிரிவில் இணையவழி விநாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. இப்போட்டிகளை இந்தியன் வங்கி மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து நடத்தியது. ஓவியப் போட்டியில் ஜூனியர் பிரிவில் முதல் பரிசு தி.நகர் குண்டூர் சுப்பைய்யா பிள்ளை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி எம்.ஷாலினிக்கும், 2-ம் பரிசு ஆவடி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஏ.சையது ரிஹானுக்கும், 3-ம் பரிசு பூந்தமல்லி நசரேத்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் கே.சர்வேஸ்வரனுக்கும், சீனியர் பிரிவில் இணைய வழி விநாடி-வினா போட்டியில் கீழ்ப்பாக்கம், பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் வி.அர்ஜுனுக்கு முதல் பரிசும் வழங்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கான கட்டுரை போட்டியில் காட்டாங்கொளத்தூர் அடுத்த நின்னகரை அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சீனி சந்திரசேகரனுக்கு முதல் பரிசும், தி.நகர் நவபாரத் மெட்ரிக் பள்ளி ஆசிரியை எஸ்.சாமுண்டீஸ் வரிக்கு 2-ம் பரிசும், புழல் கன்னப்பசாமி நகர் அரசு மேனிலைப் பள்ளி ஆசிரியை எம்.வி.சஃபாராவுக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் நேற்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், இந்தியன் வங்கியின் களப் பிரிவு துணை பொது மேலாளர் சந்திர பிரகாஷ் ரொக்கப் பரிசும், சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர், அவர் பேசும்போது, ‘மாணவர்கள் மத்தியில் ஊழல் தடுப்பு குறித்தும், நெறிமுறை கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் சிறந்த மற்றும் வெளிப்படையான நல்லாட்சியை அமைக்க முடியும்.
நாட்டின் வளர்ச்சிக்கு கண்காணிப்பு என்பது அவசியம் வாய்ந்தது. இதனால்தான் அரசு ஆண்டுதோறும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை கடைபிடித்து வருகிறது’’ என்றார். இந்நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் கள பொதுமேலாளர் எம்.வெங்கடேசன், தலைமை மேலாளர் (கண்காணிப்பு) சசிரேகா, இந்து தமிழ் திசை நாளிதழின் விளம்பரப் பிரிவு மண்டல மேலாளர் கே.வடிவேல், சீனியர் எக்சிகியூடிவ் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.