பழநி: பழநியில் பராமரிப்பு பணிக்காக 44 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப் கார் சேவை புதன்கிழமை (நவ.20) காலை முதல் மீண்டும் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு செல்ல படிப்பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்), ரோப் கார் ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். வின்ச் ரயிலில் 7 நிமிடங்களிலும், ரோப் காரில் 3 நிமிடங்ளிலும் மலைக்கோயிலை அடையலாம். இதனால் ரோப் காரில் பயணிக்க அதிகளவில் பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மாதந்தோறும் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக ஒரு நாளும், ஆண்டுக்கு 40 – 50 நாட்கள் வரையும் நிறுத்தப்படுகிறது.
அதன்படி, கடந்த அக்.7-ம் தேதி முதல் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. அப்போது, ரோப் காரை இயக்கும் மோட்டார், பற்சக்கரங்கள், ஷாப்டுகள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டன. பராமரிப்பு பணி முடிந்து 44 நாட்களுக்கு பிறகு இன்று (நவ.20) காலை முதல் பக்தர்களுக்காக மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கியது. முன்னதாக, சிறப்பு பூஜை செய்யட்டது. இணை ஆணையர் மாரிமுத்து, கண்காணிப்பாளர்கள் கிட்டம்மாள், சுரேஷ்குமார் கலந்து கொண்டனர்.