குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆந்திரா, தெலங்கானா பக்தர்களின் வருகை வெகுவாய் அதிகரித்துள்ளது. காத்திருக்கும் பக்தர்களுக்கு புத்துணர்வு அளிக்க மூலிகை குடிநீர் மற்றும் பிஸ்கெட் வழங்கப்பட்டு வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிச.26-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 15-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட நெரிசல் மற்றும் அதிருப்தியை சரி செய்யும் வகையில் தேவசம்போர்டு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி பக்தர்கள் நிலக்கல், பம்பை, சன்னிதானத்தில் ஓய்வெடுக்க ஜெர்மன் தொழில்நுட்பத்தில் நவீன நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. வனப்பகுதியில் இருந்து வருபவர்களுக்கு 132 ஓய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தரிசனம், பேருந்து முன்பதிவுகள் 24 மணி நேரத்துக்கு செல்லுபடியாகும். ஆகவே பதற்றமின்றி வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தரிசனத்துக்காக காத்திருப்பவர்களின் புத்துணர்வுக்காக சுக்கு கலந்த மூலிகை சுடுதண்ணீர், பிஸ்கெட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தற்போது ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தே அதிக பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தளவில் ஓசூர், கடலூர் உள்ளிட்ட பகுதி பக்தர்களின் வருகை உள்ளது. சபரிமலையில் ஒவ்வொரு மாத பூஜைக்காக நடைதிறக்கும் போது தமிழக பக்தர்கள் அதிகம் வந்து தரிசனம் செய்து விடுகின்றனர். மேலும் ஒரு மண்டலத்துக்கு விரதம் இருந்தே ஐயப்பனை தரிசிக்க வருவதால் இவர்களின் வருகை சில வாரங்கள் கழித்தே அதிகரிக்கும் என்று தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், ”முன்பதிவு அடிப்படையிலே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் எந்த பகுதி பக்தர்களின் வருகை அதிகம் உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதன்படி தற்போது 60சதவீதத்துக்கும் மேலாக ஆந்திரா, தெலங்கானா பக்தர்களின் வருகை உள்ளது. அடுத்ததாக கர்நாடகா, தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை உள்ளது. முன்பெல்லாம் நெரிசல் ஏற்படும் போதே தரிசன நேரம் அதிகரிக்கப்படும். இந்த ஆண்டு முதல்நாளில் இருந்து 18மணிநேர தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் நெரிசல் இல்லாத நிலை உள்ளது” என்றார்.