மின் வாகனங்களி்ல் பயன்படுத்தப்படும் இவி பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு (பிக்கி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிக்கி மின்சார வாகன கமிட்டி தலைவர் சுலாஜ்ஜா ஃபிரோடியா மோத்வானி நேற்று கூறியதாவது:
மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கவும், சார்ஜிங் சேவைகளை குறைந்த கட்டணத்தில் அளிக்கவும் மின் வாகன (இவி) பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டியது தற்போது அவசியமானதாக உள்ளது. எனவே, இதுகுறித்த பரிந்துரையை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு நாங்கள் பரிந்துரையை தயார் செய்து அளி்க்க உள்ளோம்.
தற்போதைய நிலையில் சார்ஜிங் சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதமாக உள்ளது. இதனை 5 சதவீதமாக குறைத்திட ஜிஎஸ்டி கவுன்சிலை வலியுறுத்த உள்ளோம். இதன் மூலம், வாடிக்கையாளர்களின் சார்ஜிங் சேவைகளுக்கான செலவினம் என்பது கணிசமாக குறையும்.
அதேபோன்று, இந்தியாவில் மின் வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி 5 சதவீதமாக உள்ள நிலையில், பேட்டரிகள் மீதான வரி விதிப்பு 18 சதவீதமாக உள்ளது. இதனையும், 5 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலிடம் கோர உள்ளோம். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் மின் வாகனங்களுக்கான பேட்டரியை மாற்றிக் கொள்ளும் செலவினம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும். இவ்வாறு மோத்வானி கூறினார்.