இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி, இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது கருத்து நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை உருவாக்கி உள்ளது. “நான் காலை 6.20 மணி முதல் இரவு 8.30 மணி வரை பணியாற்றுவேன். அதுபோல உழைத்தால்தான் இந்தியா முன்னேறும். தற்போது உலக அளவில் இந்தியாவின் உற்பத்தி குறியீடு பின்தங்கி உள்ளது. அதேபோல், நாட்டில் நிலவும் ஊழல், அதிகார வர்க்கம் கடமையாற்றுவதில் உள்ள தாமதம் ஆகியவை மாறினால் மட்டுமே இந்தியா வேகமான வளர்ச்சியை எட்ட முடியும்” என்றும் நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.
மன்னர்கள் ஆண்டபோது நாட்டு மக்களை அடிமைகளாக பிடித்துச் சென்று சங்கிலியால் கட்டிவைத்து, சாப்பாடு மட்டுமே கொடுத்து பெரிய அரண்மனை, கோட்டை, மாடமாளிகைகளை கட்டச் செய்தனர். அங்கு ஆரம்பித்ததுதான் உழைக்கும் வர்க்கம். வெள்ளையர்கள் ஆண்டபோது அவர்களுக்கு அடிபணியாதவர்களை சிறைபிடித்து, கப்பலில் ஏற்றிச் சென்று மலேசியா, பர்மா, இலங்கை, அந்தமான் போன்ற தீவுகளில் இறக்கிவிட்டு தோட்ட வேலைகளில் ஈடுபடச் செய்தனர். உழைக்கும் வர்க்கத்தினர் உலகம் முழுக்க தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்த பின்னர் 19-ம் நூற்றாண்டில் 8 மணி நேர உழைப்பு உருவானது. கம்யூனிஸ சிந்தாந்தங்களின் வளர்ச்சி காரணமாக, தொழிலாளர் யூனியன், தொழிலாளர் வைப்பு நிதி, போனஸ், மருத்துவக் காப்பீடு, குடும்ப பாதுகாப்பு என போராடிப் பெற்ற உரிமைகள் தற்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
19-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு நடத்திய ஆய்வில், 40 மணி நேரத்துக்குமேல் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் நிறைய தவறிழைப்பதை கண்டறிந்தார். அதனால், தொழிலாளர்களை திறமையாக வேலைவாங்க, 40 மணி நேர வேலையை அறிமுகம் செய்தார். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருகைக்குப் பின் 5 நாள் வேலை, சுற்றுலா சலுகை, வீட்டிலிருந்து வேலை, பணி – வாழ்க்கை சமநிலை என்றெல்லாம் தொழிலாளர் நலன் முன்னேற்றப் பாதையில் இருந்து வருகிறது.
நாராயணமூர்த்தி போன்றவர்கள் வீட்டில் காலை 6 மணிக்கு கிளம்பினால் 6.20-க்கு அலுவலகத்தில் இருக்க முடியும். அதேவசதி அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைப்பதில்லை. பெங்களூரு போன்ற நகரங்களில் வீட்டில் இருந்து கிளம்பி அலுவலகம் செல்லவே இளைஞர்கள் 1 முதல் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் செலவிட வேண்டியுள்ளது.
நாட்டின் வளர்ச்சியில் நாராயணமூர்த்தி போன்றவர்களின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், அவரது நிறுவனம் மட்டுமே நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யவில்லை. எத்தனையோ புத்தாக்க நிறுவனங்களில் இளைஞர்களின் உழைப்பும் இணைந்துதான் நாடு வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது நிலவும் ஊழலை ஒழித்தாலே நாடு மும்மடங்கு வளர்ச்சியை எட்டும். அதைவிடுத்து, 70 மணி நேர வேலை போன்ற யோசனைகள் எல்லா துறைகளுக்கும் பொருந்தக் கூடியது அல்ல என்பதோடு, ஆர்வத்தோடு உழைக்க முன்வரும் இளைஞர்களின் உற்சாகத்தைக் குறைக்கவும் ஒரு காரணியாக மாறிவிடும்!