பெர்த்: ரன் குவிக்க முடியாததால் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்கவுள்ளது.
இந்தத் தொடர் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிளென் மெக்ராத் கூறியதாவது:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடர் 2 அணிகளுக்குமே சவால் நிறைந்ததாக இருக்கும். இந்தத் தொடரில் முன்னணி வீரர்கள் ரன் குவிப்பது கடும் சவாலாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி, மிகச் சிறந்த வீரர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால், எனக்கு தெரிந்தவரை தற்போது விராட் கோலி மிகவும் அழுத்தத்தில் இருக்கிறார். கடந்த சில தொடர்களாக அவரால் போதுமான ரன்களைக் குவிக்க முடியவில்லை. அதிக ரன்கள் குவிக்காததால் அவருக்கு இந்தத் தொடரில் நிச்சயமாக அழுத்தம் இருக்கும்.
ஒருவேளை ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரின் முதல் 2 இன்னிங்ஸ்களில் அவர் குறைந்த ஸ்கோரை எடுத்தால் அது அவருக்கு சிக்கலை உருவாக்கும். இதனால் அந்தத் தொடர் முழுவதுமே அவரால் சிறப்பாக விளையாட முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.
இந்தப் பிரச்சினையை நிச்சயம் விராட் கோலியும் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால், விராட் கோலியின் மன உறுதியை உடைக்க ஆஸ்திரேலிய வீரர்கள் முடிவு செய்து அதிக விமர்சனங்களை வைக்கக் கூடும். களத்தில் அவருடன் வாக்குவாதத்திலோ அல்லது மோதலிலோ ஈடுபட்டால், அவரால் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புகள் உள்ளன. என்னை பொறுத்தவரை விராட் கோலி ஒரு உணர்ச்சிப்பூர்வமான கிரிக்கெட் வீரர். சிறப்பாக விளையாடும் போது மிகவும் உச்சத்தில் இருப்பார்.
அதேபோல் மோசமான ஃபார்மில் இருந்தால், எதிர்பார்ப்பதை விடவும் மோசமாக விளையாடுவார். நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த பின்னர் இந்திய அணிக்கு மிகப்பெரிய அழுத்தம் இருப்பது குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம்.
சவாலான தொடர்: அதனால் தொடக்கம் முதலே போதுமான திட்டங்களுடன் இந்திய அணியை பலவீனமடைய செய்தால், ஆஸ்திரேலியா அணியால் எளிதாக தொடரை கைப்பற்ற முடியும்.
எனவே, இந்தத் தொடர் இந்தியாவுக்கு மிகவும் சவாலான தொடர்தான். அதே நேரத்தில் இந்திய அணியில் மிகச்சிறந்த வீரர்கள் இருப்பதால், ஆஸ்திரேலிய அணியும் பொறுப்புடன் விளையாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் விராட் கோலி 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 31.68 ரன் சராசரியுடன் 1,838 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள், 9 அரை சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி மொத்தமாக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,040 ரன்களைக் குவித்துள்ளார். அவரது ரன் குவிப்பு சராசரி 47.83 சதவீதமாக உள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவுடன் மட்டும் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,042 ரன்களை எடுத்துள்ளார். அந்த அணிக்கு எதிராக ஓர் இன்னிங்ஸில் அதிகபட்சமாக 186 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.