எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ், இந்தி நடிகர் திலீப் குமார் உட்பட அந்த கால டாப் ஹீரோக்கள் பலரை இயக்கியவர்களில் ஒருவர் தாபி சாணக்கியா. எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘ஒளி விளக்கு’, ‘புதிய பூமி’, சிவாஜியின் ‘வாணி ராணி’ உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். (இவர் தந்தை, தாபி தர்மராவ் சாகித்ய அகாடமி விருது பெற்ற தெலுங்கு எழுத்தாளர். சில தெலுங்கு படங்களுக்குக் கதை வசனமும் பாடல்களும் எழுதியிருக்கிறார்)
தாபி சாணக்கியா, தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் இயக்கிய படம் ‘புதிய பாதை’. தெலுங்கில் இதற்கு ‘குங்குமரேகா’ என்ற தலைப்பு வைத்திருந்தனர். இந்தியில் பி.ஆர்.சோப்ரா இயக்கத்தில் அசோக் குமார், சுனில் தத், மீனா குமாரி நடித்து வெளியான ‘ஏக்- கி- ரஸ்தா’ என்ற படத்தின் ரீமேக் இது.
ஜெமினி கணேசன் ஹீரோவாக நடித்தார். சாவித்திரி ஹீரோயின். கே.ஏ.தங்கவேலு, ஏ.கருணாநிதி, கே.பாலாஜி, எம்.சரோஜா என பலர் நடித்தனர். முரசொலி மாறன் இதன் வசனத்தை எழுதினார். யூசூப் முல்ஜி ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு மாஸ்டர் வேணு இசை அமைத்தார். ஏ.மருதகாசி, கண்ணதாசன் பாடல்கள் எழுதினர். ‘இன்னும் ஏன் வரவில்லை’, ‘ஆசைகள் மலர்வது பருவ நெஞ்சிலே’, ‘தஞ்சாவூர் பொம்மை போலே’, ‘முயன்றால் புகழ் பெறவே முடியாதா’ உட்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட ‘நீயும் நானும் ஜோடி/ இனி நீயும் நானும் ஜோடி’ என்ற பாடல் படத்தில் இடம் பெறாமல் இசைத்தட்டில் மட்டும் இடம்பெற்றது.
‘ஏக்-கி-ரஸ்தா’ படத்தில் ஹேமந்தா முகர்ஜி இசை அமைத்த பாடலின் மெட்டிலேயே, ‘ஆசைகள் மலர்வது பருவ நெஞ்சிலே’ பாடலை, அமைத்திருந்தார், இசை அமைப்பாளர். மாஸ்டர் வேணு. தமிழில் நாயகியாக நடித்த சாவித்திரி தெலுங்கிலும் அதே கேரக்டரில் நடிக்க மற்ற கதாபாத்திரங்களில் எம்.பாலையா, ஜக்கையா என தெலுங்கு நடிகர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் சாவித்திரியின் நடிப்பும் நடனமும் பாராட்டப்பட்டது.
1960-ம் ஆண்டு நவ.10-ம் தேதி தெலுங்கில் வெளியான இந்தப் படம் நவ.17-ம் தேதி தமிழில் வெளியானது. சாரதி ஸ்டூடியோஸ் தயாரித்த இந்தப் படத்தின் கதைக்கும் ஆர்.பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான ‘புதிய பாதை’ (1989) படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.