இலங்கை – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லேகெலே நேற்று நடைபெற்றது. மழை காரணமாக 47 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 45.1 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 76, மிட்செல் ஹே 49, வில் யங் 26 ரன்கள் சேர்த்தனர். இலங்கை அணி சார்பில் தீக்சனா, ஃஜெப்ரே வாண்டர்சே ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், அஷிதா பெர்னாண்டோ 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
210 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 46 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குஷால் மெண்டிஸ் 102 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 74 ரன்களும், தீக்சனா 27 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். 163 ரன்களுக்கு 7 விக்கெட்களை இலங்கை அணி ஒரு கட்டத்தில் இழந்திருந்த நிலையில் இந்த ஜோடி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தியது.
3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போடடித் தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் அந்த அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. நியூஸிலாந்து அணிக்கு எதிராக 12 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரை இலங்கை அணி கைப்பற்றுகிறது. கடைசியாக 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை இலங்கை அணி 3-0 என வென்றிருந்தது.