கம்பம்: சபரிமலை ஐயப்பன் கோயில் 18-ம் படிகளில் பக்தர்களை தூக்கி விடும் போலீஸாருக்கு சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஏணி போன்ற இந்த அமைப்பில் அமர்ந்து இரண்டு கைகளாலும் பக்தர்களை தூக்கி மேலே செல்ல உதவி வருகின்றனர்.
இருமுடி கட்டி செல்லும் பக்தர்கள் ஐயப்பன் கோயிலில் 18-ம் படி வழி செல்வது வழக்கம். இதில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் செல்லும் போது சிரமம் ஏற்படுகிறது. இவர்களுக்கு உதவுவதற்காக படியின் இருபுறமும் போலீஸார் நின்று தூக்கிவிடுவது வழக்கம். இதற்காக படி அருகே உள்ள கயிறை ஒரு கையில் பிடித்து மறுகையில் பக்தர்களுக்கு உதவுவர். இந்நிலையில் இரண்டு கைகளிலும் பக்தர்களை தூக்கினால் எளிதாக இருக்கும். நெரிசலும் குறையும் என்று தந்திரிக்கு தெரிவிக்கப்பட்டது.
18-ம் படியில் எந்த சிறுமாற்றமும் செய்ய வேண்டும் என்றால் அது தந்திரியின் ஒப்புதலுடன்தான் செய்ய வேண்டும். இதன்படி இந்த ஆலோசனையை தந்திரி கண்டரரு ராஜீவரு ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து படிகளின் ஓரங்களில் போலீஸாருக்கு ஏணிபோன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் போலீஸார் லேசாக அமர்ந்தவாறே இரண்டு கைகளிலும் பக்தர்களை தூக்கி தற்போது உதவி செய்து வருகின்றனர். இதனால் 18-ம் படியில் நெரிசல் எதுவுமின்றி பக்தர்கள் கூட்டம் வேகமாக கடந்து சென்று கொண்டிருக்கிறது.