சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. தமிழக உணவு பாரம்பரியத்தில் சாம்பாருக்கு முக்கிய இடம் உள்ளது. சாம்பார் செய்ய கத்தரிக்காய்க்கு அடுத்தபடியாக அதிக அளவில் பயன்படுத்தப்படுவது முருங்கைக்காய். கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில மாதங்களாக முருங்கைக்காய் வரத்து அதிகரித்த நிலையில் கிலோ ரூ.10 ஆக விலை வீழ்ச்சி அடைந்திருந்தது.
கடந்த வாரம் கூட கிலோ முருங்கைக்காய் ரூ.10-க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு கடந்த சில நாட்களாக வரத்து குறைந்து அதன் விலை கிலோ ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான பெரிய வெங்காயம், கேரட் தலா ரூ.40, பீட்ரூட், சாம்பார் வெங்காயம், நூக்கல் தலா ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.28, தக்காளி, பீன்ஸ், அவரைக்காய், முள்ளங்கி தலா ரூ.20, வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய் தலா ரூ.15, கத்தரிக்காய் ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது.
முருங்கைக்காய் விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பனிப்பொழிவு, கனமழை என மாறி மாறி நிகழ்வதால், மரங்களில் காய் பிடிப்பது குறைந்து, உற்பத்தியும், வரத்தும் குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது. வரும் டிசம்பர் வரை விலை குறைய வாய்ப்பில்லை” என்றனர்.