கோவாவில், போலீஸாரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்காக குற்றவாளிகளைப் பிடித்துத் தருபவர் ஃபிரான்சிஸ் (சூர்யா). ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு கும்பல் ஸெடா (சேயோன்) என்னும் சிறுவனைக் கொல்லத் துடிக்கிறது. அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஸெடா, ஃபிரான்சிஸிடம் தஞ்சம் அடைகிறார். ஸெடாவுக்கும் தனக்கும் பூர்வஜென்ம பந்தம் இருப்பதாக உணர்கிறார் ஃபிரான்சிஸ்.
கி.பி 1070-ல் ஐந்தீவுகளில் ஒன்றான பெருமாச்சியின் இளவரசனாகவும் மக்களைக் காக்கும் வீரனாகவும் இருக்கிறான் கங்குவா (சூர்யா). 25,000 வீரர்களைக் கொண்ட ரோமானிய படை, பெருமாச்சி மீது போர் தொடுக்கவருகிறது. அவர்களுக்கு உதவும் கொடுவன் (நட்டி) உயிரிழந்துவிட, அவரது மகனை (சேயோன்) பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கிறார் கங்குவா. இதற்கிடையில் பெருமாச்சி மீது பெரும்பகை கொண்ட அரத்தி தீவின் அரசன் உதிரன் (பாபி தியோல்) பெருமாச்சியை அழிக்க ரோமானியருடன் கைகோக்கிறான். பெருமாச்சிக்கும் அரத்திக்குமான போரில் வென்றது யார்? கங்குவாவுக்கு என்ன ஆகிறது? இதற்கும் நிகழ்கால ஃபிரான்சிஸ் – ஸெட்டாவுக்கும் என்ன தொடர்பு? என்கிற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக் கதை.
மாஸ் நட்சத்திரங்களை வைத்து சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த படங்களை தந்த இயக்குநர் சிவா, இதில் பீரியட் கதையுடன் களமிறங்கி இருக்கிறார். 2024, 1070 என 2 காலகட்டங்களில் நடக்கும் கதைகளை இணைத்து, நான் லீனியர் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தீவுகளில் வாழ்ந்த தமிழ் தொல்குடிச் சமூகங்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் முயற்சியை பாராட்டலாம். அதற்கான காட்சிகளில் பிரம்மாண்டம் வியக்க வைத்தாலும் உணர்வுபூர்வமான தாக்கம் சில இடங்களில் மட்டுமே ஏற்படுவது பெரும்சோகம்.
முதல் அரை மணிநேரம் நடக்கும் காட்சிகளில் நகைச்சுவை, சாகசம், காதல், திஷா பதானியின் கவர்ச்சி என கலந்திருந்தாலும் எதையும் ரசிக்க முடிய வில்லை. குறிப்பாக யோகிபாபுவும் ரெடின் கிங்ஸ்லியும் நகைச்சுவை என்கிற பெயரில் வெறுப்பேற்றுகிறார்கள். 1070-ம் ஆண்டுக்கு கதை நகர்ந்த பிறகு, ஐந்தீவுகளின் அறிமுகம், அவற்றின் அமைப்பு, கதாபாத்திர வடிவமைப்பு, படையெடுத்துவரும் வீரர்கள், சதி, துரோகம் என அடுத்தடுத்த காட்சிகள் திரையுடன் ஒன்ற வைக்கின்றன. நாயகன் கங்குவா கதாபாத்திரத்தின் வழியாக தமிழ்த் தொல்குடிகள் வீரம் மட்டுமல்ல மன்னிப்பு, சத்தியம் தவறாமை, தியாகம் போன்ற குணங்களுடன் திகழ்ந்தார்கள் என்பதைப் பதிவுசெய்திருப்பது சிறப்பு.
ஆனால் கங்குவாவின் பின்னணி, அவருக்கும் அந்தச் சிறுவனுக்குமான உணர்வு பூர்வமான தருணங்கள் ஆகியவற்றுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கப் பட்டிருந்தால் இந்தக் காட்சிகள் உரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். விதவிதமான லொகேஷன்களில் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளுக்கே திரைக்கதையின் பெரும்பகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சண்டை வடிவமைப்பில் புதுமையும் பிரம்மாண்டமும் சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.
பெருமாச்சியின் பெண்கள், எதிரிகளை வீழ்த்தும் ஆக்ஷன் காட்சி கவர்கிறது. இறுதியில் ஒரு முன்னணி நடிகரின் அறிமுகத்துடன் 2-ம் பாகத்துக்கு கொடுக்கப்படும் முன்னறிவிப்பு ஆச்சரியம் தந்தாலும் அதற்கு முந்தைய காட்சிகள் அளித்த ஆயாசமே அங்கும் தலைதூக்குகிறது. கங்குவாவாக சூர்யாவின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. உணர்வுபூர்வமான நடிப்பிலும் அனுபவ முத்திரையைப் பதிக்கிறார். பாபி தியோலுக்கான வில்லன் கதாபாத்திரம் வலுவில்லாததாக இருந்தாலும் அவரது தோற்றமும் உடல்மொழியும் அச்சுறுத்தத் தவறவில்லை. இருவேறு கதாபாத்திரங்களில் சிறுவன் சேயோன் அழகான நடிப்பைத் தந்திருக்கிறார். கருணாஸ், பி.எஸ்.அவினாஷ், கலைராணி, போஸ் வெங்கட், நட்டி, வசுந்தரா, வருண், கயல் தேவராஜ் என பலர் தாங்கள் ஏற்ற பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
தொல்குடி மக்களின் பேச்சு வழக்கைக் கொண்டு வந்திருப்பதில் வசனம் எழுதிய மதன் கார்க்கியின் உழைப்பு பளிச்சிடுகிறது. தேவி பிரசாத் இசையில் ‘மன்னிப்பு’ பாடலில் மெட்டு, வரிகள், குரல் என அனைத்தையும் ரசிக்கமுடிகிறது. பின்னணி இசை சில இடங்களில் காட்சிக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவும் பீரியட் பகுதிகளுக்கு வளம் சேர்த்திருக்கிறது. கலை இயக்குநரின் பணியும் பாராட்டத்தக்கது. படம் முழுவதும் சூர்யா உட்பட யாரேனும் ஒருவர் கத்திக்கொண்டே இருப்பது பேரிரைச்சலை தருகிறது. பிரம்மாண்டத்தால் வியப்பை ஏற்படுத்தும் இந்த ‘கங்குவா’, உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறான்.