ஆர்லிங்டன்: குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால். இதில் நடுவர்கள் தங்கள் முடிவுகளில் மாறுபட்டனர். நடுவர்களில் ஒருவர் ஜேக் பாலுக்கு 80-72 என்றும், மற்ற இருவர் 79-73 என்றும் எட்ஜ் கொடுத்தனர்.
58 வயதான முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியன் மைக் டைசன் மற்றும் 27 வயதான சமூக வலைதள பிரபலமாக இருந்து தொழில்முறை குத்துச்சண்டை வீரரான ஜேக் பால் இடையிலான இந்தப் போட்டி தலைமுறைகள் கடந்த இரண்டு வீரர்களுக்கு இடையிலான போட்டியாக பார்க்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு நாக் அவுட் மன்னனான மைக் டைசன் பாக்சிங் ரிங்கில் என்ட்ரி கொடுத்தது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஆர்லிங்டன் ‘ஏடி அண்ட் டி’ விளையாட்டு அரங்கில் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று நடைபெற்றது. போட்டி தொடங்கியதும் டைசன் சில பஞ்ச்-களை வேக வேகமாக கொடுத்தார். ஆனால், அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதன் பிறகு பால் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடினார். சில பஞ்ச்கள் மிஸ் ஆகின.
கடந்த 2005-க்கு பிறகு டைசன் விளையாடிய போட்டியாக இது பார்க்கப்படுகிறது. மறுபக்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஜேக் பால் தொழில்முறை குத்துச்சண்டைக்குள் என்ட்ரி கொடுத்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்தப் போட்டி கடந்த ஜூலை 20-ம் தேதி நடந்திருக்க வேண்டும். டைசனுக்கு வயிற்று பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த போட்டிக்கான நடுவர்களில் ஒருவர் ஜேக் பாலுக்கு 80-72 என்றும், மற்ற இருவர் 79-73 என்றும் எட்ஜ் கொடுத்தனர். இறுதி பெல் அடித்த போது மரியாதை நிமித்தமாக மேற்கொள்ளப்படும் வழக்கத்தையும் பால் தவிர்த்தார். நேற்றைய தினம் ஃபேஸ்-ஆஃப்பின் போது பாலை மைக் டைசன் தாக்கி இருந்தார். அதற்கான பதிலை ரிங்கில் கொடுப்பேன் என பால் சொல்லி இருந்தார்.