சென்னை: “அப்பாவின் புகழிலிருந்து பிரிந்து செல்வது கடினமாக இருந்தது” என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் என்று தான் அடையாளப்படுத்தப்பட்டது குறித்து பேட்டியொன்றில் அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “பொதுமக்கள் கிட்டத்தட்ட எல்லா நேரமும் அப்பா குறித்தே தொடர்ந்து கேட்கின்றனர். அப்போது எனக்கு ‘நான் ஸ்ருதி, எனக்கென்று சொந்த அடையாளம் வேண்டும்’ என்று தோன்றும். மக்கள் என்னை நோக்கி கைகாட்டி, ‘அது கமலின் மகள்’ என்று சொல்கிறார்கள். என்னிடம் யாராவது கேட்டால், அதற்கு நான், ‘இல்லை, என் அப்பா டாக்டர் ராமச்சந்திரன்’ என்று சொல்வேன். அது எங்களுடைய பல் மருத்துவரின் பெயர். ‘நான் பூஜா ராமச்சந்திரன்’. இது நானாக உருவாக்கிய ஒரு பெயர். என் அப்பா ஒரு நடிகரோ அல்லது ஒரு பிரபலமோ என்பதற்காக இதை சொல்லவில்லை.
சிறுவயதிலிருந்தே நான் சந்தித்த யாரையும் விட அவர் வித்தியாசமானவர் என்று எனக்கு தெரிந்தே இருந்தது. இரண்டு உறுதியான மனிதர்களால் நான் வளர்க்கப்பட்டேன். அந்த உறுதி எனக்கும் என் தங்கைக்கும் வந்து சேர்ந்துள்ளது. அவர்கள் பிரிந்தபோது நான் மும்பைக்கு சென்றேன். அப்பாவின் போஸ்டரே எல்லா இடங்களிலும் இருக்கும் நிலையில் அவருடைய புகழிலிருந்து பிரிந்து செல்வது கடினமாக இருந்தது. இன்று, கமல்ஹாசன் இல்லாமல் நான் ஸ்ருதி என்பதை கற்பனை கூட செய்ய விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன். இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.