2022-ம் ஆண்டில் ஓஇசிடி நாடுகள் என்று கூறப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு நாடுகளுக்கு 5.6 லட்சம் இந்தியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற ஓஇசிடி நாடுகளுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் குடிபெயர்ந்து விடுகின்றனர். உயர் படிப்பு, வேலை, திருமணம் முடித்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அந்த நாடுகளுக்கு மக்கள் குடிபெயர்கின்றனர். அந்த வகையில் 2022-ம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த 5.6 லட்சம் பேர், ஓஇசிடி நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்த ஓஇசிடி நாடுகளுக்கு குடிபெயரும் நாடுகள் வரிசையில் இந்தியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டை காட்டிலும் 2022-ம் ஆண்டில் 35 சதவீதம் கூடுதலாக இந்தியர்கள் ஓஇசிடி நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ள தகவல் கிடைத்துள்ளது. இந்தியர்களுக்கு அடுத்தபடியாக ஓஇசிடி நாடுகளுக்கு சீனர்கள் அதிக அளவாக குடிபெயர்ந்துள்ளனர். 2022-ல் 3.2 லட்சம் சீனர்கள் ஓஇசிடி நாடுகளில் குடியேறியுள்ளனர். சீனாவுக்கு அடுத்த இடத்தில் 2.6 நபர்களுடன் ரஷ்யா உள்ளது என்று தி இன்டர்நேஷனல் மைக்ரேஷன் அவுட்லுக் அமைப்பு அறிக்கையை பிரான்ஸ் தலைநகர் பிரான்ஸில் வெளியிட்டுள்ளது.
2022-ல் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த 5.6 லட்சம் இந்தியர்களில் 1.12 லட்சம் பேர் பிரிட்டனுக்குச் சென்றுள்ளனர். அமெரிக்காவுக்கு 1.25 லட்சம் பேரும், கனடாவுக்கு 1.18 லட்சம் பேரும் இடம்பெயர்ந்துள்ளனர். அதேநேரத்தில் ரஷ்யா, ரொமேனியா நாடுகளில் இருந்து தலா 2.7 லட்சம் மக்கள் ஓஇசிடி நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து துருக்கி, இஸ்ரேல், ஜெர்மனி நாடுகளுக்கு அதிக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அதேபோல் ரொமேனியா நாட்டிலிருந்து ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்கு அதிக மக்கள் குடிபெயர்ந்துள்ளனர் என்று தி இன்டர்நேஷனல் மைக்ரேஷன் அவுட்லுக் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.