மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்), வால்ட் டிஸ்னி நிறுவனம் மற்றும் வயாகாம் 18 மீடியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் டிவி மற்றும் டிஜிட்டல் தளங்கள் இணைந்துள்ளது என அறிவித்துள்ளன. இதன் கூட்டு மதிப்பு ரூ.70,000 கோடி என அறியப்படுகிறது.
இந்த நிறுவனங்களின் இணைப்பு மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடு என தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களின் அனைத்து விதமான அங்கீகார அனுமதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மீடியா மற்றும் என்டர்டைன்மெண்ட் துறையில் இது மிகப்பெரிய இணைப்பாக பார்க்கப்படுகிறது. மேலும், பார்வையாளர்களுக்கு பல்சுவை கன்டென்ட்கள் காணக்கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைக்காட்சியை பொறுத்தவரை ஸ்டார் மற்றும் கலர்ஸ், டிஜிட்டல் தளத்தில் ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டாரின் கூட்டாக இது பார்க்கப்படுகிறது. இதில் 36.84 சதவீத உரிமை டிஸ்னி வசம் இருக்கும். ரிலையன்ஸ் நிறுவனம் நேரடி உரிமையாளர் என்ற முறையில் 16.34 மற்றும் வயாகாம் 18 மீடியா மூலம் 46.82 சதவீதத்தை கொண்டிருக்கும். இதன் மொத்த ஆண்டு வருவாய் சுமார் 26,000 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் இந்த துறையில் ஏகபோக ஆதிக்கத்தை ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி செலுத்தும் என வணிக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதில் நீட்டா அம்பானி தலைவராகவும், உதய் சங்கர் துணைத் தலைவராகவும் உள்ளனர். மூன்று சிஇஓ-க்கள் பணிகளை நிர்வகிக்க உள்ளனர்.
100 டிவி சேனல்கள், 30000+ மணி நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆண்டுக்கு இந்த கூட்டு நிறுவனம் தயாரிக்கும். ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டார் தளத்தில் மட்டும் சுமார் 50 மில்லியன் பயனர்கள் உள்ளனர்.
மாற்றத்துக்கான தொடக்கம்: “இந்த கூட்டு முயற்சியின் ஊடாக இந்திய மீடியா மற்றும் என்டர்டைன்மெண்ட் துறை மாற்றத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளது. டிஸ்னி உடனான இந்த பயணம் இந்திய பார்வையாளர்களுக்கு மலிவு விலையில் பல கன்டென்ட்களை வழங்குவதை உறுதி செய்யும்” என ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.