பெர்த்: ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்நிலையில், பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய வீரர் கே.எல்.ராகுலின் முழங்கையை பந்து தாக்கியுள்ளது. இதையடுத்து அவர் ஆட்டத்திலிருந்து வெளியேறினார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பழைய பெர்த் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். வெள்ளிக்கிழமை (நவ.15) அன்று 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கே.எல்.ராகுலின் முழங்கையை பிரசித் கிருஷ்ணா வீசிய ஏறுமுகமாக வந்த பந்து தாக்கியது. இதையடுத்து பிசியோ பரிசோதனைக்கு பிறகு ஆட்டத்திலிருந்து ராகுல் வாக் அவுட் செய்தார். அவரது முழங்கை குறித்து அசெஸ் செய்ய வேண்டி உள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடாத பட்சத்தில் அணியின் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் விளையட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு முழங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கவலை தரும் விஷயமாக அமைந்துள்ளது. ஆடும் லெவனில் இடம் பிடிக்கும் வாய்ப்புக்காக ராகுல் காத்துள்ளார். கடைசியாக கடந்த 2023 டிசம்பரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சதம் பதிவு செய்தார். அதன் பின்னர் ஆடிய 9 இன்னிங்ஸில் இரண்டு அரை சதம் மட்டுமே பதிவு செய்துள்ளார். நியூஸிலாந்து தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் அவர் விளையாடி இருந்தார். அதன் பின்னர் புனே மற்றும் மும்பை போட்டியில் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஸ்கேன் பரிசோதனைக்கு சென்ற கோலி? – இந்திய அணியின் மூத்த வீரரான விராட் கோலி, வியாழன் அன்று ஸ்கேன் பரிசோதனைக்கு சென்றதாக ஆஸ்திரேலிய செய்தி நிறுவனமான ‘தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர் எதற்காக பரிசோதனைக்கு சென்றார் என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கோலி பங்கேற்றார். கடைசியாக கடந்த 2023 ஜூலையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அவர் சதம் பதிவு செய்தார். அதன் பின்னர் 14 டெஸ்ட் இன்னிங்ஸில் ஆடியுள்ள அவர், இரண்டு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார்.