அரியலூர்/தஞ்சாவூர்: கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் மூலவராக உள்ள பதின்மூன்றரை அடி உயரம், அறுபது அடி சுற்றளவு கொண்ட லிங்கத்துக்கு ஐப்பசி பவுர்ணமி தினமான நேற்று 100 மூட்டை பச்சரிசியால் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 13-ம் தேதி கணக்க விநாயகருக்கும், நேற்று முன்தினம் பிரகதீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, 100 மூட்டை பச்சரிசி சாதம் சமைத்து, லிங்கத்தின் மீது சாத்தப்பட்டது. மேலும், சுவாமியை மலர்களால் அலங்கரித்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, சுவாமி மீது சாத்தப்பட்ட சாதம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது. திரளானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். மீதமான சாதம், அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் மீன்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் காஞ்சி மட அன்னாபிஷேக கமிட்டியினர் செய்திருந்தனர்.
இதேபோல, தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி பெருவுடையாருக்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக 1,000 கிலோ அரிசியில் சாதம் தயார் செய்யப்பட்டு, 13 அடி உயரமுடைய பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, பெருவுடையாருக்கு அரிசி சாதம் மற்றும் 500 கிலோ காய்கறி, பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பெருவுடையாரை வழிபட்டனர். பின்னர், இரவில் அலங்காரம் கலைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.