கும்பகோணம்: பெரியநாயகி அம்மன் உடனாய நாகேஸ்வரர் கோயிலில் ஐப்பசி கடை முழுக்கையொட்டி அஸ்ரத் தேவருடன் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும், காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெற்றது.
கும்பகோணத்தில் பெரியநாயகி அம்மன் சமேத நாகேஸ்வரர் கோயில் உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் இந்த விழாவையொட்டி ஐப்பசி முழுவதும் அஸ்ரத் தேவர் புறப்பாடும் மாத இறுதி நாளில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும், தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
நடப்பாண்டு ஐப்பசி தொடங்கிய நாளான கடந்த மாதம் 18ம் தேதி முதல் இக்கோயிலிருந்து அஸ்ரத் தேவர் புறப்பட்டு, காவிரி ஆறு பகவத் படித்துறைக்குச் சென்று, அங்கு அஸ்ரத் தேவருக்கு 21 வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு, பின்னர் ஊர்வலமாகக் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, ஐப்பசி கடைசி நாளான இன்று (15-ம் தேதி) கடை முழுக்கையொட்டி, அஸ்ரத் தேவருடன், பஞ்ச மூர்த்திகள் சுவாமிகள் ரிஷப வாகனத்தில் கோயிலிருந்து புறப்பட்டு பிரதான வீதிகள் வழியாகக் காவிரி ஆறு பகவத் படித்துறைக்கு விமர்சையாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கு அஸ்ரத் தேவருக்குச் 21 வகையான மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அங்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் தீர்த்தவாரியை கண்டருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அப்போது, பக்தர்கள் அனைவரும் புனித நீராடி நாகேஸ்வரா, நாகேஸ்வரா என முழக்கமிட்டபடி, தரிசனம் மேற்கொண்டனர். தொடர்ந்து மாலை பஞ்சமூர்த்தி சுவாமிகள் சேஷ வாகனத்தில் சிறப்பலங்காரம் செய்யப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகப் பக்தர்களுக்கு காட்சியளித்தபடி ஊர்வலமாக கோயிலுக்குக் கொண்டுச் செல்லப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் இல.விஜய் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.