அசுன்சியோன்: 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தென் அமெரிக்க தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் நடப்பு உலகச் சாம்பியன் அர்ஜெண்டினா மற்றும் பராகுவே அணிகள் விளையாடின.
பராகுவே நாட்டின் தலைநகரான அசுன்சியோனில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் மார்டினஸ் கோல் பதிவு செய்தார். இருப்பினும் அடுத்த எட்டு நிமிடங்களில் அதற்கான பதில் கோலை பதிவு செய்தது பராகுவே. சொந்த நாட்டு மக்களின் ஆதரவு பராகுவே அணிக்கு அமோகமாக இருந்தது.
பராகுவே அணி வீரர் அன்டோனியோ சனாப்ரியாவின், ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் பைசைக்கிள் கிக் மூலம் கோல் பதிவு செய்து அசத்தினார். அர்ஜெண்டினாவின் எமிலயானோ மார்டினஸுக்கு அது அதிர்ச்சி கொடுத்தது. அதன் பின்னர் இரு அணிகளும் முதல் பாதி ஆட்டம் முடியும் வரை கோல் எதுவும் பதிவு செய்யவில்லை.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய இரண்டு நிமிடங்களில் (47-வது நிமிடம்) பராகுவே அணியின் உமர் அல்டெரெட்டின் ஹெட்டர் மூலம் கோல் பதிவு செய்தார். அதன் பின்னர் ஆட்ட நேரம் முழுவதும் அர்ஜெண்டினா அணியால் பதில் கோல் பதிவு செய்ய முடியவில்லை. அதனால் 2-1 என்ற கோல் கணக்கில் பராகுவே அணி வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தென் அமெரிக்க தகுதி சுற்றில் அர்ஜெண்டினா அணி 11 ஆட்டங்களில் விளையாடி 22 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் கொலம்பியா, பிரேசில், உருகுவே, ஈக்குவேடார், பராகுவே ஆகிய அணிகள் உள்ளன. பட்டியலில் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும்.