சச்சின் டெண்டுல்கரின் மகனும் கோவா அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜுன் டெண்டுல்கர், ரஞ்சி கோப்பை போட்டியில் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இது அவரது முதல் 5 விக்கெட் ஸ்பெல் ஆகும். தனது 17-வது முதல் தரப்போட்டியில் முதல் முறையாக அர்ஜுன் டெண்டுல்கர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 9 ஓவர்களே வீசிய அர்ஜுன் 25 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவரது இந்த ஆக்ரோஷ பந்து வீச்சை அடுத்து அருணாச்சலப் பிரதேச அணி 84 ரன்களுக்குச் சுருண்டது.
இந்த 5 விக்கெட்டுகளுக்கு முன்னர் அர்ஜுன் டெண்டுல்கர் 14 போட்டிகளில் 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். சராசரி 37.75. அதாவது சுமார் 38 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற சராசரியில் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது அவரது திறமைக்குக் குறைவான செயல்திறனே. 84 ரன்களுக்கு அருணாச்சலப் பிரதேசத்தைச் சுருட்டிய பிறகு கோவா அணி 54 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 414 ரன்கள் எடுத்துள்ளனர்.
மும்பையில் ஆடுவது உண்மையில் பெரிய சவால் என்று கோவா அணிக்கு ஆடுவது என அர்ஜுன் டெண்டுல்கர் முடிவெடுத்தார். கோவாவுக்கு ஆட முடிவெடுத்தது அவர் கிரிக்கெட்டில் புதிய பாதைகளை திறந்து விட்டுள்ளது. சதம் ஒன்றையும் அடித்ததோடு இப்போது 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மும்பையில் அவர் பலரது கெடுபிடியில் இருந்தார். அது அவரது செயல்திறனைப் பாதித்தது. இப்போது அனைவரது பார்வையிலிருந்தும் விலகியிருப்பதை அடுத்து அழுத்தம் இல்லாமல் ஆடுகிறார் அர்ஜுன்.
அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி ஷேன் பாண்ட் ஒருமுறை கூறியது என்னவெனில் அர்ஜுன் டெண்டுல்கர் தன் பேட்டிங்கையும் பீல்டிங்கையும் மேம்படுத்த வேண்டும் என்றார். அர்ஜுன் டெண்டுல்கர் தன் பந்து வீச்சு வேகத்தை அதிகரிக்க வேண்டும், அப்போது ஷேன் பாண்ட் கூறும்போது அர்ஜுன் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் வீசிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.