சென்னை: சென்னையில் கடந்த 4 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,720 குறைந்திருப்பது நகைவாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தீபாவளி நாளில் (அக்.31) ஒரு பவுன் ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், நேற்று பவுனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு பவுன் ரூ.55,480-க்கு விற்கப்பட்டது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,935-க்கு விற்பனையானது.
கடந்த 10-ம் தேதி பவுன் தங்கம் ரூ.58,200-க்கு விற்பனையானது. இதையடுத்து நேற்று வரையிலான 4 நாட்களில் ரூ.2,720 அளவுக்கு குறைந்துள்ளது. இவ்வாறு தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து, ரூ.99-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 ஆயிரம் குறைந்து ரூ.99 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு போரும் ஒரு காரணம் ஆகும். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கும் முன், போர் இல்லாத சூழலை உருவாக்குவதாக உறுதியளித்துள்ளார். இதன் காரணமாக தங்கத்தின் விலை வெகுவாக குறைந்தது. தற்போதைய சூழலில் வேறு ஏதேனும் புதிய விஷயங்கள் நடந்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கக் கூடும். இல்லாவிட்டால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தோடு காணப்படும். இவ்வாறு தெரிவித்தார்.