சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி வீரர்கள் வாகா மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது: இரு அணியிலும் வேகப்பந்து வீச்சு தாக்குதல் வலுவாக இருப்பதால் டாப் ஆர்டர் பேட்டிங் சரிவை சந்திக்கும் பட்சத்தில் இரு அணிகளின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பந்த், அலெக்ஸ் கேரி ஆகியோர் முக்கிய பங்குவகிக்கக்கூடும். இவர்கள் இருவருமே ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர்கள். ஒருவேளை 5 விக்கெட்களை இழக்கும் சமயத்தில், ஆட்ட நேரத்தின் இறுதிப்பகுதியில் புதிய பந்து எடுக்கப்படும் பட்சத்தில் 10 ஓவர்களில் இவர்கள் விரைவாக 50 ரன்களை சேர்த்துவிடுவார்கள். இது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும்.
பேட்டிங்கில் 7-வது இடத்தில் களமிறங்கும் வீரர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். எனது கருத்துப்படி இரு அணியின் வேகப்பந்து வீச்சும், சுழற்பந்து வீச்சும் சமஅளவிலேயே உள்ளது. எனினும் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் சுழற்பந்து வீச்சில் நேதன் லயனுக்கு சிறிது சாதகம் ஏற்படக்கூடும். இரு அணிகளின் பேட்டிங் வரிசைகளும் சிறிது காலமாக சிறந்த முறையில் இல்லை, இதனால்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் முக்கியம் என கருதுகிறேன். இவ்வாறு ஆரோன் பிஞ்ச் கூறினார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான பிராட் ஹாடின் கூறும்போது, “இந்திய பேட்ஸ்மேன்கள் எங்களின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குப்பிடித்து நிற்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறந்த வீரர் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர், இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் விளையாடியது இல்லை. எகிறி வரும் பந்துகளை அவர், எப்படி கையாளப் போகிறார் என்பது தெரியவில்லை. பெர்த் ஆடுகளத்தில் தொடக்க பேட்டிங் கடினமானது” என்றார்.