மும்பை: ஐபிஓ-வில் களமிறங்கிய ஸ்விக்கிநிறுவனம் தனது பங்குகளை பங்குச் சந்தையில் நேற்று முதன்முறையாக பட்டியலிட்டது. முதலீட்டாளர்களிடையே அந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு வரவேற்பு மிகுந்து காணப்பட்டது.
இதையடுத்து, பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே ஸ்விக்கி பங்கின் விலை ரூ.44 அதிகரித்து ரூ.456-ல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக அந்தபங்கின் விலை ரூ.465 வரை சென்றது. இந்த நிலையில், பங்குச் சந்தையில் ஸ்விக்கியின் வரவுக்கு அதன் போட்டியாளரான ஸோமேட்டோ வாழ்த்து தெரிவித்துள்ளது. இதற்காக, தனது எக்ஸ்பக்கத்தில் தனிச்சிறப்பான கலைப்படைப்பை பகிர்ந்த ஸோமேட்டோ சிஇஓ தீபிந்தர், ‘வாழ்த்துகள் ஸ்விக்கி’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ல் ஸோமேட்டோ நிறுவனம் பங்குச் சந்தையில் களமிறங்கும்போதும் இதே போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகியது. ஸ்விக்கி நிறுவன பங்குகளின் வெளியீட்டு விலை ரூ.390-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேசிய பங்குச் சந்தையில் நேற்று அந்நிறுவனத்தின் பங்குகள் ரூ.420-க்கு பட்டியலாகின. சந்தை சரிவுக்கு இடையிலும் நேற்றைய வர்த்தகத்தில் ஸ்விக்கி பங்கின் விலை 16.91 சதவீதம் வரை ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.
ஐபிஓ-வில் களமிறங்கிய ஸ்விக்கி, பங்கின் விலையை ரூ.371-ரூ.390 என்ற அளவில் நிர்ணயம் செய்திருந்தது. இந்த நிலையில், பணியாளர் பங்கு விருப்ப திட்டத்தின் (இஎஸ்ஓபி) கீழ் அந்நிறுவனம் முன்னாள், இந்நாள் பணியாளர் 5,000 பேருக்கு ரூ.9,000 கோடி மதிப்பிலான பங்குகளை ஒதுக்கியது. வெளியீட்டு விலை ரூ. 390 ஆக இருந்த நிலையில், 8 சதவீத பிரீமியத்துடன் பட்டியலான ஸ்விக்கியின் பங்குகள் நேற்று கணிசமான ஏற்றத்தை சந்தித்தன. இதையடுத்து, பங்குகளை வாங்கிய 5,000 பேரில் 500 ஸ்விக்கி ஊழியர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.