மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வீழ்ச்சியில் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 984.23 புள்ளிகள் (1.25 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 77,690.95 ஆக இருந்தது. வர்த்தகத்தின்போது 1,141.88 புள்ளிகள் (1.45 சதவீதம்) வரை சரிந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகம் நிறைவடையும்போது நிஃப்டி 324.40 புள்ளிகள் (1.36 சதவீதம்) சரிவடைந்து 23,559.05 ஆக இருந்தது.
கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவில் அக்டோபர் மாத சில்லரை பணவீக்கம் 6.21 சதவீதமாக அதிகரித்தது, வெளிநாட்டு நீதியின் வெளியேற்றம் போன்றவை முதலீட்டாளர்களிடம் ஏற்படுத்திய தாக்கமே பங்குச் சந்தைகளின் சரிவுக்கு வழிவகுத்தது. இதனால் புதன்கிழமை பங்கு வர்த்தகம் 1 சதவீதத்துக்கும் அதிகமாக சரிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில், மகேந்திரா அண்ட் மகேந்திரா, டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், ஜேஎஸ்டபில்யூ ஸ்டீல், இண்டஸ்இன்ட் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃஃப்சி பேங்க் மற்றும் கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்திருந்தன. டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் இன்போசிஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன.
ஆசிய பங்குச் சந்தைகளான சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகளும் சரிவுடன் நிறைவடைந்தது என்றாலும், ஷங்காய் பங்குச் சந்தையில் மட்டும் ஏற்றம் நிலவியது. ஐரோப்பிய பங்குச் சந்தைகள் உயர்வில் நிறைவடைந்திருந்தன. அமெரிக்க பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தது.