மெல்போர்ன்: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குணம் குறித்து நான் அறிவேன்; ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி எழுச்சி காண்பார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
அண்மையில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து நேர்காணல் ஒன்றில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருந்தார். அது குறித்து கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ‘பாண்டிங் ஆஸ்திரேலிய அணி குறித்து கவலை கொள்ளட்டும். இந்திய அணி குறித்து பேசுவது அவருக்கு அவசியமில்லை’ என கம்பீர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஊடக நிறுவனத்திடம் அண்மையில் பாண்டிங் தெரிவித்தது: எனது கருத்தை அடுத்து வெளியான ரியாக்ஷன் எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது. இது குறித்து கம்பீர் பேசியதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் அவர் குணம் என்னவென்று நான் அறிவேன். டெல்லி கேபிடல்ஸ் அணியில் அவருக்கு நான் பயிற்சி அளித்துள்ளேன்.
நான் கோலியின் ஆட்டம் குறித்து சொன்னது இதுதான். கோலி குறித்த செய்தி ஒன்று எனது கவனத்துக்கு வந்தது. அதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் இரண்டு சதங்களை மட்டுமே கோலி பதிவு செய்துள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது. அது எனக்கு கவலை அளித்தது. ஆஸ்திரேலிய மண்ணில் அவர் எழுச்சி காண்பார் என்று சொல்லி இருந்தேன். ஆனால், எனது கருத்து வேறு வகையில் எடுத்து செல்லப்பட்டுள்ளது. கோலிக்கும் சதம் பதிவு செய்ய முடியவில்லை என்ற கவலை இருக்கும். இவ்வாறு பாண்டிங் தெரிவித்துள்ளார்.