கம்பம்: தொடர் மழை, பனியினால் தற்போது குளிர்பருவநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் திராட்சை நுகர்வுத்தன்மை குறைந்து விலை வெகுவாய் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சின்னமனூர், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திராட்சை அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இங்கு விளையும் திராட்சைகள் சென்னை, சேலம், திருச்சி, கோட்டயம், சங்கனாச்சேரி, எர்ணாகுளம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சந்தைப்படுத்தப்படுகிறது.
பொதுவாக மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் திராட்சைகள் ஆண்டுக்கு ஒருமுறையே அறுவடை செய்யப்படுகிறது. ஆனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்ற பருவநிலை நிலவுவதால் ஆண்டுக்கு மூன்று முறை மகசூல் கிடைக்கிறது. இதனால் இந்தியாவிலேயே ஆண்டு முழுவதும் திராட்சை விளைச்சல் நடைபெறும் பகுதி என்ற சிறப்பை கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது.மேலும் காலநிலை மாறி தற்போது பனிப் பருவம் தொடங்கி உள்ளது.
இந்த குளிர்பருவத்தில் பலரும் திராட்சை பழங்களை உண்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் திராட்சை நுகர்வுத் தன்மையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விற்பனையில் தேக்கம் ஏற்பட்டதால் சாலையோர வியாபாரிகள் முதல் பெருவியாபாரிகள் வரை இவற்றை கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் திராட்சைகள் பறிக்காமலே கொடியிலே விரயமாகி வருகிறது. மேலும் தொடர்மழைக்கு அழுகல் நோயினாலும்பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திராட்சை உற்பத்தியாளர் நலச்சங்க தலைவர் செல்வக்குமார் கூறுகையில், “உலகில் வேறெங்கும் இதுபோன்ற பருவநிலையும், ஆண்டு முழுவதுமான திராட்சை உற்பத்தியும் இல்லை. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு திராட்சை புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இந்நிலையில் மழை, பனியினால் விற்பனை குறைந்து தற்போது மொத்த கொள்முதலாக கிலோ ரூ.30-க்கு விற்பனையாகிறது. கோடை காலத்தில் ரூ.80முதல் ரூ.100 வரை விற்பனையானது. விலை வீழ்ச்சியினால் விவசாயிகளுக்கு பல லட்சரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திராட்சைகளை எல்லா பருவநிலையிலும் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து தர வேண்டும்,” என்றார்.