சென்னை: கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் மற்றும் கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. அதன்படி பீன்ஸ் ரூ.20-க்கும், தக்காளி ரூ.23-க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் கனமழை பெய்த நிலையில், செடிகளில் பூக்கள் உதிர்வார் காய்கள் பிடிப்பது பாதிக்கப்பட்டு, கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்திருந்தது. அதனால் அச்சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது காய்கறிகளின் விலை குறையத் தொடங்கியுள்ளது.
அதன்படி கோயம்பேடு சந்தையில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி வாக்கில் தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்ற நிலையில் இன்று ரூ.23 ஆகவும், ரூ.100-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.20 ஆகவும், ரூ.50-க்கு விற்கப்பட்ட அவரைக்காய் ரூ.25 ஆகவும், ரூ.30-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் ரூ.15 ஆகவும், ரூ.15-க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய், முட்டை கோஸ் தலா ரூ.10 ஆகவும் குறைந்துள்ளது.
மற்ற காய்கறிகளான பெரிய வெங்காயம் ரூ.80, சாம்பார் வெங்காயம் ரூ.70, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் தலா ரூ.30, பச்சை மிளகாய் ரூ.25, பாகற்காய், நூக்கல் தலா ரூ.20, முள்ளங்கி, வெண்டைக்காய், புடலங்காய் தலா ரூ.15 என விற்கப்பட்டு வருகிறது.
காய்கறி விலை குறைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, “கடந்த மாதம் தமிழகம் மட்டுமல்லாது, கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளை அனுப்பும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் கனமழை பெய்தது. அதனால் வரத்து குறைந்தது. ஆயுத பூஜை, தீபாவளி என பண்டிகை நாட்களும் இருந்தன. புரட்டாசி முடிந்து ஐப்பசியில் இல்ல சுப நிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெற்றன. அதனால் காய்கறிகளின் உயர்ந்திருந்தது. தற்போது குறைந்து வருகிறது” என்றனர்.