தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக தற்போது இருப்பவர் முரளி ராமசாமி. இவர் பதவி விலக வேண்டும் என்று இச்சங்கம் மற்றும் திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கேயார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ் திரைப்படத்துறை பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. சேட்டிலைட், ஓடிடி, கியூப் கட்டணம், டிக்கெட் புக்கிங் கட்டணம் என எதையுமே முறைப்படுத்த முடியாவிட்டால் எதற்கு தலைவர் பதவி? தலைமைக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உறுப்பினர்கள் தயாரான சூழலில் சூழ்ச்சியுடன், நடிகர் தனுசுக்கு ரெட் கார்டு, புதிய படங்களைத் தொடங்காமல் வேலை நிறுத்தம் என்று அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார்.
நான் தலைவராக இருந்த போது அறக்கட்டளையிலும் சங்கத்திலும் சேர்த்து வைத்திருந்த சுமார் ரூ.11 கோடியை, விஷால் தலைமையிலான நிர்வாகத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, உறுப்பினர்களுக்கு உதவிகள் வழங்குவதாகக் கஜானாவையே காலி செய்தார்கள்.
1994-ல் சங்க உறுப்பினர்கள் நலனுக்காக நானும் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி-யும் அறக்கட்டளையை உருவாக்கினோம். அதில் வரும்வட்டியை எடுத்துதான் உதவி செய்ய வேண்டுமே தவிர, டெபாசிட் தொகையில் கை வைக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அது கிரிமினல் குற்றம். அவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பணமும் மீட்கப்படவில்லை. எனவே எஸ்.ஆர். பிரபு, தற்போதைய தலைவர் முரளி, பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குத் தொடர உள்ளேன்.
தனது சொந்த பிரச்சினைகளில் இருந்துதப்பிக்க, தலைவர் பதவியை கேடயமாக முரளி பயன்படுத்துவதை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறு கேயார் கூறியுள்ளார்.