சென்னை: ஓடிடியில் வெளியாகும் படங் களுக்கு சென்சாரை கடுமையாக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கோவாவில் நடைபெறும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடர்பாக தென்னிந்திய சினிமா கலைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமை வகித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் திரைத்துறையினர் பலர் கலந்துகொண்டு ஆலோச னைகளை வழங்கினர்.
சர்வதேச திரைப்பட விழா– பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவ.20 முதல் நவ.28-ம் தேதி வரை கோவாவில் 8 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் திரைப்பிர பலங்கள் பலர் கலந்து கொள் கின்றனர். இது திரைப்பட விழா வாக மட்டுமின்றி திரைத்துறை சார்ந்தவர்களின் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும், திரைப்படங்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தவும் உதவும்.
‘வேல்ஸ்’ உச்சி மாநாடு: சினிமாத் துறை பெரிய வளர்ச்சியடைந்த துறையாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் முதல்முறையாக சர்வதேச ஆடியோ விஷுவல் மற்றும் பொழுது போக்குக்கான ‘வேல்ஸ்’ உச்சி மாநாடு பிப்.5 முதல் பிப்.9 வரை டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் நாளிதழ்கள், டிவி, ஓடிடி, டிஜிட்டல், சினிமா, அனிமேஷன், செயற்கை நுண்ணறிவு போன்ற அனைத்து துறை சார்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்.
தென்னிந்திய சினிமாவுக்காக டிரிபுனல் சென்சார் போர்டை சென்னைக்கு கொண்டுவரவும், ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கான சென்சாரை கடுமை யாக்கவும் நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலாச்சாரத்துக்கு எதிராக…: சுதந்திரமாக படத்தை இயக்கலாம். அதற்காக நாட்டின் கலாச்சாரத்துக்கு எதிராக செயல்படு வதை அனுமதிக்க முடியாது. இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து நட வடிக்கை எடுக்கப்படும். ‘அமரன்’ போன்ற நாட்டுப்பற்றுள்ள படங் களை வரவேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் தேசிய சினிமா வளர்ச்சிக் கழகத்தின் இணை செயலாளர் பிரிதுல் குமார், திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், கேயார், சிவா, பி.எல்.தேனப்பன், எல்ரெட்குமார், இயக்குநர்கள் பார்த்திபன், ஆர்.கே.செல்வமணி, பி.வாசு, லட்சுமிராமகிருஷ்ணன், நடிகர் யுகிசேது, தணிக்கை வாரிய அதிகாரி பால முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.