கிருஷ்ணகிரி: சந்தூரில் உற்பத்தி செய்யப்படும் மாங்கன்றுகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதன்மை வகிக்கிறது. அல்போன்சா, பித்தர், மல்கோவா, பங்கனப்பள்ளி, காலபாட், பெங்களூரா உள்ளிட்ட சுவை மிகுந்த மாங்கனிகள் மூலம் மாங்கூழ், மா ஊறுகாய், மாம்பழ பேஸ்ட், மா சுவைக்கான அடிப்படை மூலப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
மா சாகுபடி மூலம் விவசாயிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை தொழிலாளர்கள், மாங்கூழ் தொழிலாளர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் குடும்பத்தினர் இத்தொழிலால் பயன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மாங்கன்று உற்பத்தியில் நேரிடையாகவும், மறைமுகமாவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் பயன்பெற்று வருகின்றனர்.
போச்சம்பள்ளி, சந்தூர், பட்டகப்பட்டி, ஜெகதேவி, தொகரப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தரமான மாங்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சந்தூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மா நர்சரிகளுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள் நேரடியாக வந்து செடிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் இடைத்தரகர்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் சந்தூர் மாங்கன்றுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என மா விவசாயிகள் தெரிவித்தனர்.
ஒரே ஆண்டில் பூத்து காய்க்கும்: இதுகுறித்து மா விவசாயி சதாசிவம் மற்றும் சிலர் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மாங்கன்றுகள் ஏற்றுமதி நடக்கும். சந்தூரில் உற்பத்தி செய்யப்படும் மாஞ்செடிகள் ஒரு ஆண்டில், பூக்கள் பூத்து காய்க்கும் திறனுடையது. இதனால், வெளிமாவட்ட, மாநில விவசாயிகள் இங்கே நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனர்.
இதேபோல், இடைத்தரகர்கள் மூலமாக சந்தூர் மாங்கன்றுகள், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியாவுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. சந்தூர் மாங்கன்றுகளுக்கு வெளிநாடுகளில் உள்ள விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நாங்களும் அங்கிருந்து புதிய ரக மாங்கன்றுகள் இறக்கு மதியும் செய்கிறோம். தற்போது இடைத்தரகர்கள் மூலம் மட்டுமே ஏற்றுமதி வாய்ப்பு உள்ளது.
எனவே, விவசாயிகள் நேரடியாக ஏற்றுமதி செய்ய தேவையான கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். குறிப்பாக மா ஏற்றுமதி மண்டலம் அமைத்தால், மாங்கன்றுகள், மாம்பழங்கள் ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். தற்போது பெங்களூரா ரக மாஞ்செடிகள் (ஒன்று) ரூ.70-ம், காதர், அல்போன்சா, மல்கோவா உள்ளிட்டவை ரூ.90 முதல் தரத்தை பொறுத்து விற்பனையாகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.