கோவை: தமிழகத்தில் மலையேற்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டணத்தை குறைப்பதோடு, மலைப்பகுதிகளில் மலையேற்றம் செல்வோரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் 2018-ல் குரங்கணி மலையில் காட்டுத் தீயில் சிக்கி மலையேற்றம் சென்றவர்கள், பொதுமக்கள் என 23 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மலையேற்றத்துக்கு வனத்துறை தடை விதித்தது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கை பற்றிய புரிதலை ஏற்படுத்த மலையேற்றத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளில் உள்ள மலையேற்ற வழித்தடங்களுக்கான வரைபடப் புத்தகங்கள் உருவாக்கப்படுவதுடன், அத்தடங்களின் அடிப்படை வசதிகள் ரூ.4 கோடியில் மேம்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.
அதன்பேரில் தமிழக வனத்துறை ‘ஆன்லைன் ட்ரெக்கிங் டிரெயில் அட்லஸ்’ மூலம் 40 மலையேற்ற வழித்தடங்களுக்கான இணையதளத்தை (www.trektamilnadu.com) உருவாக்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மலையேற்ற வழித்தடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. நவம்பர் 1-ம் தேதி முதல் முன்பதிவு செய்து மலையேற்றதுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மலையேற்றப் பாதைகள் எளிதான, மிதமான மற்றும் கடினமான என 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 40 மலையேற்ற வழித்தடங்களில் கோவையில் 7, நீலகிரியில் 10, திருப்பூரில் 1 என மூன்று மாவட்டங்களில் மொத்தம் 18 மலையேற்ற வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எளிதான மலையேற்ற வழித்தடத்தில் மானம்பள்ளி, பர்லியாறு (கோவை), கெய்ர்ன் ஹில், லாங்க்வுட் சோலை (நீலகிரி), சின்னாறு சோதனைச்சாவடி கோட்டார் (திருப்பூர்), மிதமான மலையேற்ற வழித்தடத்தில் அவலாஞ்சி கோலாரிபெட்டா, கரிக்கையூர் முதல் பொரிவரை குகை ஓவியம் (நீலகிரி), சாடிவயல் சிறுவாணி, செம்புக்கரை பெருமாள் முடி, ஆழியாறு கால்வாய் (கோவை), கடினமான மலையேற்ற வழித்தடத்தில் அவலாஞ்சி – கோலாரிபெட்டா, கரிக்கையூர் முதல் ரங்கசாமி சிகரம், அவலாஞ்சி காலிஃபிளவர் ஷோலா தேவர் பெட்டா, பார்சன்ஸ் வேலி முக்கூர்த்தி குடில், நீடில் ராக் (நீலகிரி), வெள்ளியங்கிரி மலை, டாப்சிலிப் பண்டாரவரை (கோவை) ஆகியவை உள்ளன.
கட்டண விவரங்கள்: மலையேற்றத்தில் நபர் ஒருவருக்கு ரூ.599-ல் தொடங்கி ரூ.5099 வரை கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதில் எளிதான பிரிவில் ரூ.599 தொடங்கி அதிகபட்சமாக ரூ.1,449 வரையிலும், மிதமான பிரிவில் ரூ.1,199-ல் தொடங்கி அதிகபட்சமாக ரூ.3,549 வரையிலும், கடினமான பிரிவில் ரூ.2,799-ல் தொடங்கி அதிகபட்சமாக ரூ.5,099 வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்துடன் 5 சதவீதம் ஜிஎஸ்டி தொகை கூடுதலாக செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் மலையேற்றம் மேற்கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கும் காப்பீடு வழங்கப்படுகிறது. இதனிடையே மலையேற்ற வழித்தடத்துக்கு கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், கட்டணத்தை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்களும், மலையேற்றம் செல்வோரும் வலியுறுத்தியுள்ளனர். கோவை வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் முன்பதிவு செய்து மலையேற்றம் செல்ல முடியாத சூழல் உள்ளது.
இதுகுறித்து ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறியதாவது: மலையேற்றம் என்பது சாகச மனநிலையிலோ, கொண்டாட்ட மனநிலையிலோ இருக்கக் கூடாது. மலையேற்ற வழித்தடங்களில் உள்ள இடங்கள் பெரும்பாலும் யானைகள் வசிக்கும் மலைப் பகுதிகளாகும். அது, யானை உள்ளிட்ட உயிரினங்களின் வீடு.
நாம் செல்லும்போது அவை வரவேற்பதில்லை. மாறாக மலையேற்றம் செல்வது வன உயிரினங்களுக்கு அழுத்தம் தருகிறது. மலையேற்றம் செல்பவர்கள் காடுகளில் அணியும் உடைகளை அணிந்து, பாதுகாப்பாகவும் சென்று வர வேண்டும். வாசனை திரவியம் தெளித்து செல்லக் கூடாது. அநாகரிகமாக குப்பை கொட்டக் கூடாது. காட்டுக்கு செல்வதற்கு விதிமுறைகள் உள்ளன.
அவற்றை மலையேற்றம் செல்வோர் கட்டாயம் பின்பற்ற வேண்டும். காட்டையும், அதன் பல்லுயிர் சூழலையும் கண்டுகளித்து, அடுத்த தலைமுறைக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்ற கடமையும், பொறுப்புணர்வும் நம்மிடம் வர வேண்டும். அதேபோல கல்வி நிறுவனங்கள் சார்பில் மலையேற்றம் சென்று இயற்கை சூழல் கல்வி கற்பிக்க விரும்புவோர் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு சலுகைக் கட்டணத்தை அறிவிக்க அரசு முன்வர வேண்டும், என்றார்.
இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, “மேற்குத் தொடர்ச்சி மலையில் மனித-வன உயிரின முரண்பாடு அதிகமாக உள்ளது. விவசாய நிலங்களில் வன உயிரினங்கள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மனித-வன உயிரின முரண்பாடுகளை தடுக்கவும், வேட்டைத் தடுப்புப் பணிகளில் ஈடுபடவுமே வனப்பணியாளர்களுக்கு நேரம் சரியாக உள்ளது. வனத்துறையில் உள்ள பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும். இச்சமயத்தில் மலையேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலைகளில் புலி, சிறுத்தை, யானை, காட்டுமாடு, கரடி ஆகிய வன உயிரினங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவில் உள்ள காடுகளில் பயணிகளை அழைத்துச் செல்லும்போது வன உயிரினங்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள துப்பாக்கி ஏந்திய வனத்துறையினர் பாதுகாப்பு அளிப்பது உண்டு. அங்கு சூழல் சுற்றுலாவுக்கு கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் குறைந்த அளவிலான பயணிகள் தான் வருவார்கள்.
மலையேற்றம் செல்லும்போது வன உயிரினங்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழகத்தில் துப்பாக்கி ஏந்திய வனத்துறை பாதுகாப்பு அளிக்கப்படுமா? என்பது தெரியவில்லை. ஒரு வேளை வன உயிரினங்களால் அசாம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்தால் அரசு இழப்பீடு தருமா? என்ற கேள்வியும் எழுகிறது. மலை யேற்றம் செல்வது அனைவருக்கும் பிடித்தமான விஷயம் தான். அதேவேளையில் மலையேற்றம் செல்லும் ஆர்வலர்கள், வனத்துறையினரின் பாதுகாப்பும் மிக முக்கியமாகும். இதை அரசு புரிந்து மலையேற்றங்களை நடத்த வேண்டும்” என்றனர்.