தம்புல்லா: இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பெற செய்தார்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளும் 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. சனிக்கிழமை அன்று முதல் டி20 போட்டி தம்புல்லாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இதில் பிரதான வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளது நியூஸிலாந்து நிர்வாகம். அந்த அணி 19.3 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி சார்பில் பிரேஸ்வெல் மற்றும் ஸக்காரி ஆகியோர் தலா 27 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.
தொடர்ந்து 136 ரன்கள் என்ற இலக்கை இலங்கை அணி விரட்டியது. இருப்பினும் அந்த அந்த பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். கேப்டன் அசலங்கா மற்றும் வனிந்து ஹசரங்கா இணைந்து 38 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது இலங்கை அணியின் வெற்றிக்கு உதவியது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அசலங்கா 28 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.
19 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இலங்கை. இந்த தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.