சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 16 மாதங்களுக்கு பிறகு கோலி பதிவு செய்துள்ள சதம். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாட வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் செயல்பாடு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், முதல் போட்டியில் கோலி சதம் விளாசியது அவர்களை பதற்றம் அடைய செய்துள்ளது.
“எந்தவித சவாலும் கொடுக்காமல் கோலியை சதம் விளாச ஆஸ்திரேலிய அணி அனுமதித்த விதம் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இந்தத் தொடர் முழுவதும் அவருக்கு இதுபோன்ற நம்பிக்கையை நாம் தரக்கூடாது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் நிலையில் ரன் குவிக்க கேப்டன் கம்மின்ஸ் அமைத்த களவியூகமும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது” என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.
கோலிக்கு வைக்கப்பட்ட ஃபீல்ட் செட்-அப் அவருக்கு நெருக்கடி எதுவும் தரவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடனும் தெரிவித்துள்ளார். கூடவே ஜெய்ஸ்வாலுக்கு ஷார்ட் பால் வீச வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பெர்த் போட்டியில் ஆஸ்திரேலிய தோல்விக்கு முதல் இன்னிங்ஸ் பேட்டிங் கொடுத்த அதிர்ச்சி காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “விராட் கோலி சில மாதங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக விளையாடினார். தற்போது ஆஸ்திரேலியாவில் தொடக்கத்திலேயே விராட் கோலி சதம் அடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு இந்தத் தொடர் பெரியதாக அமையும்” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.