பெர்த் டெஸ்ட் இனி வரலாறு. முடிந்து விட்டது, அடுத்து டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக அணிக்குத் திரும்பியுள்ளார். அவர் வருகிறார் என்பதற்காக வெற்றித் தொடக்கக் கூட்டணியான யஷஸ்வி ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் கூட்டணியைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்கிறார் இந்திய வீரர்க புஜாரா.
இவரோடு ஷுப்மன் கில் வந்தாலும் அவர் 5-ம் நிலையில் களமிறக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார் புஜாரா. ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பாதாவது:
“ரோஹித் சர்மா அணிக்குத் திரும்பி விட்டார், ஆனால் அதற்காக நாம் ஜெய்ஸ்வால் – ராகுல் கூட்டணியைத் தொந்தரவு செய்ய வேண்டியதில்லை. ரோஹித் சர்மா 3-ம் நிலையிலும் கில் வந்தால் 5-ம் நிலையிலும் இறக்கப்பட வேண்டும். தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்க விரும்பினால் கே.எல்.ராகுலை பின்னால் கொண்டு செல்லக் கூடாது, ராகுலை 3-ம் நிலையில் இறக்க வேண்டும். குறைந்தது 3-ம் நிலைதான் ராகுலுக்குச் சிறந்தது.
ராகுல் டாப் ஆர்டரில்தான் சிறப்பாக ஆடுகிறார். ஆகவே இதில் எந்த வித மாற்றமும் தேவையற்றது என்றே கருதுகிறேன். ஷுப்மன் கில்லுக்கு 5-ம் நிலை சரியாக இருக்கும். ஏனெனில் 2 விக்கெட்டுகளை சடுதியில் இழந்தாலும் புதிய பந்தைக் கையாள்வதில் கில் சிறந்தவர் என்பதால் 5-ம் நிலை சரியாகவே இருக்கும். அதே சமயத்தில் 25-30 ஓவர் சென்று கில் இறங்குகிறார், என்றால் அவர் ஷாட்களை ஆட முடியும்.
முதல் 3 விக்கெட்டுகளைச் சடுதியில் இழந்தாலும் ஷுப்மன் கில் கொஞ்சம் தடுத்து நிறுத்தி ரிஷப் பண்ட் வரும்போது பந்து பழையதாகிடச் செய்து விட்டால் பண்ட்டிற்கும் நல்லது. பண்ட் இறங்கும் போது பந்து புதிதாகவும் கடினமாகவும் இருப்பதை நான் விரும்பவில்லை. பிறகு நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் வருவார்கள் அதில் மாற்றம் தேவையில்லை.
பந்து வீச்சைப் பொறுத்தவரை பெர்த் டெஸ்ட் பவுலர்களையே வைத்திருப்பது நல்லது. ஏனெனில் இந்த பவுலிங் அட்டாக்தான் நமக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளது. பும்ரா, சிராஜ் சிறப்பாக வீசுகின்றனர். இவர்களுக்கு ஹர்ஷித் ராணா உறுதுணையாக நன்றாக வீசுகிறார். எனவே பந்து வீச்சில் மாற்றங்கள் தேவையில்லை” என புஜாரா கூறினார் .